‘பகீர்’ எச்சரிக்கைக்கு உள்ளாகும் நாடுகள்

புத்தாண்டை ஒட்டி சில நாடுகளுக்கு ‘பகீர்’ எச்சரிக்கையை விஞ்ஞானிகள் விடுத்துள்ளனர். அதாவது, இந்தப் புதிய ஆண்டில் எரிமலைச் சீற்றத்தால் ஜப்பான், அமெரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகள் சில கடும் பாதிப்புக்கு உள்ளாகப் போகின்றனவாம்.

Update: 2018-01-06 08:45 GMT
இந்தோனேசியாவின் பாலித் தீவில் சீற்றம் கொண்ட எரிமலை காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் வெளியேறிய நிலையில், இந்த ஆண்டில் எரிமலைச் சீற்றத்தால் அதிக ஆபத்தைச் சந்திக்கவுள்ள நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் கணித்து வெளியிட்டிருக்கின்றனர்.

அதில் முதலிடத்தில் ஜப்பான் உள்ளது. இங்குள்ள கிரிஷிமா எரிமலை, வெகு காலத்துக்கு முன்பிருந்தே ஆபத்தானதாக பட்டியல் இடப்படுள்ளது.

இந்த எரிமலை, கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு வெடித்துச் சிதறியது. அதுவரையிலான 50 ஆண்டு காலத்தில் எரி மலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் இது முக்கியமானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது இடத்தில் இந்தோனேசியாவின் ‘மெராபி’ எரிமலை உள்ளது. அந்த நாட்டில் உள்ள மிகவும் ஆபத்தான எரிமலைகளில் இதுவும் ஒன்று.

இது கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு வெடித்துச் சிதறியதில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர். 21-ம் நூற்றாண்டில் இதுவே மிகக் கொடூரமான எரி மலைச் சீற்றம் எனக் கூறப்படுகிறது.

ஐஸ்லாந்தின் ஒரேபஜோகுல் எரிமலை, மிகவும் ஆபத்தான எரி மலைகள் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளது. கி.பி. 1362-ம் ஆண்டு, 1727, 1728-ம் ஆண்டுகளில் இந்த எரிமலை சீறியபோது கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாம்.

இந்த எரிமலை அமைந்திருக்கும் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டுவருவது விஞ்ஞானிகளை கவலைகொள்ள வைத்திருக்கிறது.

மெக்சிகோவின் போபோகாட்பெட்டில், சிலியின் வில்லாரிகா, அமெரிக்காவின் கிலாயியா ஆகிய எரிமலைகளும் தலைவலியைத் தரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்