தியாகராஜரின் இசை கொடைகள்

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரும், சிறந்த ராம பக்தருமான ஸ்ரீ தியாகராஜர், 1767-ம் ஆண்டு திருவாரூரில் பிறந்தார். பிறகு இவர்கள் குடும்பம் திருவையாற்றுக்கு குடிபெயர்ந்தது.

Update: 2018-01-06 07:00 GMT
முனைவர் ராம.கவுசல்யா

இன்று (ஜனவரி 6-ந்தேதி) ஸ்ரீ தியாகராஜரின் ஆராதனை நாள்.

தியாகராஜரின் பாட்டனார் கிரிராஜகவி தஞ்சாவூர் அரண்மனை சமஸ்தான வித்வானாகத் திகழ்ந்தவர். இவர் சிறந்த சமஸ்கிருத பண்டிதர். இசைப் பாடல்கள் இயற்றும் ஆற்றல் மிக்கவர். தந்தையார் ராமபிரமம் தஞ்சாவூர் அரண்மனையின் ராமாயண பண்டிதர். தாய் வழி பாட்டனார் வீணை காளஹஸ்தி அய்யாவும் தஞ்சாவூர் சமஸ்தான வித்வான்.

மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட தியாகராஜர் சிறு வயதிலேயே தம் தாய் மொழியான தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றார். பாடல் இயற்றும் திறமையும் இயற்கையாக அமைந்திருந்தது. அரண்மனை சங்கீத வித்வானான சொண்டி வெங்கடரமணய்யாவிடம் இசைப் பயிற்சிக்கும் அனுப்பப்பட்டார். சிறுவன் தியாகராஜனின் இசைத் திறமை அனைவரையும் வியக்க வைத்தது.

ராமகிருஷ்ண யதீந்திரர் என்பவர் தியாகராஜருக்கு ராமநாம உபதேசம் செய்துவித்து, அதனை 96 கோடி முறை ஜெபிக்க பணித்தார். அதனை நிறைவேற்றிய தியாகராஜருக்கு ஸ்ரீராம பிரானின் தரிசனமும் கிடைத்ததாம். அது தொடங்கி, ஸ்ரீ ராமனைப் போற்றும் கிருதிகள் அவரிடம் இருந்து வெள்ளமாய் பெருக்கெடுத்தன. உஞ்ச விருத்தி தர்மத்தை கடைபிடித்துக்கொண்டு, குடும்பத்தில் பரம்பரையாக வந்த சீதை லெட்சுமணர் உடனாய ராம விக்ரகத்தைப் பூஜிப்பதும் அவன் புகழைப் பாடுவதுமாக வாழ தொடங்கினார். உஞ்ச விருத்தி என்பது தன் மனதையும், உடலையும் தாழ நிறுத்தி இறைவன் புகழைப் பாடிக்கொண்டே தெருவில் சென்று, பிச்சை ஏற்று, அதை சமைத்து இறைவனுக்கும் படைத்து, அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பது ஆகும்.

தியாகராஜரின் புகழ் எங்கும் பரவியது. நிறைய சீடர்கள் அவரிடம் இருந்து இசை கற்றுக்கொண்டார்கள். இவர்தம் புகழைக் கேள்விப்பட்ட தஞ்சை மன்னர் இவரை அரசவைக்கு அழைத்தப் போது, செல்வம் மேலான இன்பத்தைத் தருமா? அல்லது ஸ்ரீராமனின் சந்நிதியில் சேவை புரிவது சுகம் தருமா? (நிதிசால சுகமா- கல்யாணி- திரிபுடை) என்று பாடி, அழைப்பை ஏற்க மறுத்தார்.

ராமபக்தியே சாம்ராஜ்யம் (ராமபக்தி சாம்ராஜ்ய- சுத்தபங்காள- ஆதி) என்று கொண்டார். ராமா உனக்கு நிகரானவர் யார்? (ராம நீ சமான மெவரு- கரஹரப்ரியா- ரூபகம்) என்று பெருமிதம் கொண்டார். பலவிதமான மனநிலைகளில் ராமனைப் பாடி இருக்கிறார்.

என்னை எப்படிக் காப்பாற்றுவாய்? (எதுல ப்ரோதுவோ- சக்ரவாகம்- திரிபுடை) என்று தவிக்கிறார். அவன் கொலு வீற்றிருக்கும் கம்பீரத்தைக் காண்கிறார் (கொலுவையுந்நாடே- பைரவி- ஆதி). என்னை சேவகனாக ஏற்றுக்கொள் (பண்டுரீதி- ஹம்சநாதம்- ஆதி) என்று கெஞ்சுகிறார். சாந்தம், அமைதி இல்லாவிட்டால் சவுக்கியம் இல்லை (சாந்தமுலேக- சவுக்கியமுலேது- சாமா- ஆதி) என்பது போன்ற அறிவுரைகளையும் நமக்கு தருகிறார்.

கிருதி என்னும் இசை வடிவமே இன்றைய இசை நிகழ்ச்சிகளில் அதிகமாக இடம் பெறுகின்றன. இவ்வடிவத்தை முழுமைப்படுத்தியவர்களுள் தியாகராஜருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இவர் 24 ஆயிரம் கிருதிகள் பாடியதாக நம்பப்படுகிறது. இவற்றுள் ஏறத்தாழ 675 கிருதிகளே கிடைத்திருக்கின்றன. இசை கற்றுக்கொள்ள தொடங்கி இருக்கும் குழந்தைக்கான எளிமையான பாடல் முதல் இசைக் கச்சேரிகளில் எடுத்துக் கொள்ளப்படும் நடு நாயகமான, கம்பீரமான பாடல்கள் வரை என அனைத்து நிலைகளிலும் பாடல்களை இயற்றியுள்ள தனிப்பெருமை பெற்றவர் தியாகராஜர். அனைத்து பிரபல ராகங்களிலும், அபூர்வ ராகங்களிலும் பாடி உள்ளார். ஒரே ராகத்தில் பல பாடல்களைப் பாடினாலும் ஒன்றன் சாயல் மற்றொன்றில் படாமல் பாடி இருப்பது ஆச்சரியமான ஒன்றாகும்.

பெரும்பாலும் தெலுங்கிலேயே இவருடைய கிருதிகள் உள்ளன. சமஸ்கிருத மொழியிலும் சில கிருதிகள் இருக்கின்றன. ஸ்ரீராமனை பாடுவதையே நோக்கமாக கொண்டாலும், சிவனையும், தேவியையும் துதிக்கும் கிருதிகளும் பாடி இருக்கிறார். தனிப்பட்ட கிருதிகள் தவிர ஸ்ரீ தியாகராஜர் பிரகலாத பக்தி விஜயம், நவுகா சரித்திரம், சீதாராம விஜயம் ஆகிய மூன்று இசை நாடகங்களை எழுதி இருக்கிறார். இவற்றுள் சீதாராம விஜயம் மட்டும் கிடைக்கவில்லை.

ஸ்ரீ தியாகராஜரின் திவ்ய நாம கீர்த்தனைகள் என்ற தொகுப்பும், உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள் என்ற தொகுப்பும் இவருடைய இசை கொடைகளில் குறிப்பிடத் தகுந்தவை ஆகும். திவ்யநாம கீர்த்தனைகள் பஜனை சம்பிரதாய பின்னணியில் கூட்டு வழிபாட்டிற்காக இயற்றப்பட்டவை. தியாகராஜர் அவருடைய இஷ்ட தெய்வமான ராமனுக்கு காலை துயில் எழுவதில் தொடங்கி இரவு உறங்க செல்வது வரை ஒவ்வொரு நிகழ்வினையும் அவற்றிற்கான பாடல்களைப் பாடி நடத்தி மகிழ்ந்தார். அப்பாடல்களின் தொகுப்பே உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள் ஆகும்.

ராம பக்தர்களின் வரிசையில் மகத்தான இடம் பெற்றுள்ள தியாகராஜர் 1847-ம் ஆண்டு தை மாதம் பகுள பஞ்சமி நாளில் சமாதி அடைந்தார். தம்முடைய இறுதி நெருங்கி விட்டதை உணர்ந்த அவர், சந்நியாசம் பெற்றுக்கொண்டார். ஆண்டுதோறும் அவர் சமாதி அடைந்த நாளில் உலெகங்கிலும் உள்ள இசைக் கலைஞர்களும், அன்பர்களும், அவருடையப் பாடல்களை பாடி அஞ்சலி செலுத்துகிறார்கள்.

குறிப்பாக திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜர் சமாதிக் கொண்ட வளாகத்தில் அவர் சமாதிக்கு எதிரில் இசைக் கலைஞர்கள் கூடி பக்தியுடன் இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். ஒவ்வொரு இசைக் கலைஞரும் தியாகராஜரை தத்தம் குருவாகக் கொண்டு இந்த ஆராதனை நாளில் இங்கு வந்து கலந்துகொள்வதை பெரும் பேறாக கருதுகிறார்கள்.

நாட, கவுள, ஆரபி, ஸ்ரீராகம், வராளி ஆகிய ஐந்து கனபஞ்சக ராகங்களில் அவர் பாடியுள்ள பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசை கலைஞர்கள் அனைவரும் ஒன்றாக அவர் சமாதி முன் அமர்ந்து பாடி அஞ்சலி செலுத்துவதே இந்த ஆராதனை நிகழ்ச்சிகளின் சிகரம் ஆகும்.

இத்தகைய சத்குரு ஸ்ரீ தியாகப்ரம்மத்தின் அருளும், ஆசியும் அனைவருக்கும் கிடைக்க இந்த ஆராதனை புனித நாளில் வேண்டுவோமாக!

மேலும் செய்திகள்