குழந்தை வளர்ப்பு ஒரு கலை

உரிய கவனிப்பு இன்மை காரணமாக குழந்தைகள் இறப்பது உலகம் முழுக்க அதிகரித்து வருகின்றது. அதுவும் வீடுகளில் பெற்றோர், தாத்தா, பாட்டி, உறவினர்களுடன் வசிக்கும்போதே உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு சுமார் 1,70,000-ஐ தொடுகிறது.

Update: 2018-01-06 05:30 GMT
குறிப்பாக சமையல் அறை, வசிப்பறை, மாடி அறை, பால்கனி ஆகியவற்றில் அதிகளவில் குழந்தைகள் விபத்துகளை சந்திக்க நேரிடுகின்றது. குளியல் அறையில் தண்ணீருக்குள் மூழ்குதல், மண்எண்ணெய் மற்றும் தவறான மாத்திரைகள் விழுங்குதல், மருந்துகளை குடித்தல் போன்றவற்றினால் களவாடப்பட்ட பிஞ்சு உயிர்களும் அதிகம். மாடியில் இருந்து தவறி விழுவதால் இறக்கும் 5 வயது வரையுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு சுமார் 43 ஆயிரமாம்.

இவை தவிர, குறைப்பிரசவம், பிறப்பின்போது மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, மலேரியா ஆகியவற்றினால் நேரிடும் மரணங்களும் குறிப்பிடத்தகுந்தவை. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 56 லட்சம் முதல் 60 லட்சம் குழந்தைகள் வரை உயிர் இழக்கின்றன. 5 வயதை எட்டுவதற்குள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 45 சதவீத குழந்தைகள் இறக்கிறார்கள். இந்த இறப்புகள் தவிர்க்கக் கூடியவைதான் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நிதியமான ‘யுனிசெப்’ கூறுகின்றது. பிஞ்சு குழந்தைகள் பலியாவதற்கு குடும்பத்தினரின் அசட்டையே முக்கிய காரணம் என்று குழந்தைகள் விபத்து தொடர்பான ஆய்வறிக்கைகளும், புள்ளி விவரங்களும் கூறுகின்றன.

தவழ்வது, நடப்பது, ஓடுவது ஆகியவை 5 வயதுக்குள்ளாகவே நிகழ்ந்து விடுவதால் குழந்தைகளின் இந்த வயது காலங்களில் பெற்றோர் மிகுந்த அக்கறை காட்டவேண்டும். சுட்டிக் குழந்தைகளை மட்டுமே நன்கு கண்காணிக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் பெற்றோரிடையே காணப்படுகின்றது. இதில் சுட்டி, நடுத்தர, மந்த குழந்தைகள் என பிரிக்க இயலாது. ஒரு சில நொடிப்பொழுது கூட குழந்தைகள் தங்களது கண்காணிப்பை மீறாத வகையில் பார்த்துக் கொள்ளவேண்டும். அதனால்தான் என்னவோ நமது முன்னோர்கள் குழந்தை வளர்ப்பை ஒரு கலை என கூறினர் போலும்.

-லால்குடி மாயவன்

மேலும் செய்திகள்