இலவச பொருட்கள் வழங்க கவர்னர் ஒப்புதல் அளிப்பார் அமைச்சர் நமச்சிவாயம் நம்பிக்கை
பொதுமக்களுக்கு பொங்கல் இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பான கோப்பிற்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிப்பார் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
பொங்கல் பொருட்கள் வழங்க கவர்னர் ஒப்புதல் அளிக்காததையொட்டி கவர்னர் மாளிகைக்கு அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, சட்டமன்ற கொறடா அனந்தராமன் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் நேற்று மாலை 6மணியளவில் சென்றனர். அங்கு கவர்னர் கிரண்பெடியை, அவர்கள் சந்தித்துப் பேசினார்கள். இதன்பின் இரவு 8.30 மணியளவில் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டனர். சுமார் 2½ மணி நேரம் அவர்கள் கவர்னருடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வந்தனர்.
ஒப்புதல் அளிப்பார்
இதன்பின் அங்கு அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதவாது:-
புதுவை மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்குவது குறித்து அரசு சார்பில் கவர்னரிடம் பேசி உள்ளோம். இதுதொடர்பான கோப்புக்கு அவர் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்களுக்கு தேவையானவற்றை அரசு நிச்சயம் நிறைவேற்றும். மக்களுக்கு தேவையான திட்டத்தை பெறுவது தான் அரசின் நோக்கம். ஆட்சியாளர்களுக்கும், கவர்னருக்கு எந்த தகராறும் இல்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றவும் தான் தொடர்ந்து போராடி வருகிறோம். அதன்படி தான் கவர்னரை சந்தித்து பேசி உள்ளோம். கவர்னரும் ஒத்துழைப்பு தருவதாக கூறி உள்ளார். இந்த சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், சிவா ஆகியோர் உடனிருந்தனர்.