புனே வன்முறை சம்பவம் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார் குற்றம்சாட்டப்பட்ட சிவ பிரதிஸ்தான் தலைவர் பேட்டி

புனே வன்முறை சம்பவம் தொடர்பாக எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என்று குற்றம்சாட்டப்பட்ட சிவ பிரதிஸ்தான் தலைவர் ஷாம்பாஜி பீடே தெரிவித்தார்.

Update: 2018-01-05 22:15 GMT

சாங்கிலி,

புனே வன்முறை சம்பவம் தொடர்பாக எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என்று குற்றம்சாட்டப்பட்ட சிவ பிரதிஸ்தான் தலைவர் ஷாம்பாஜி பீடே தெரிவித்தார்.

ஷாம்பாஜி பீடே

புனே மாவட்டம் பீமா– கோரேகாவ் பகுதியில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட கலவரத்துக்கு சிவ பிரதிஸ்தான் அமைப்பின் தலைவர் ஷாம்பாஜி பீடே தான் காரணம் என்றும், அவர் வன்முறையை தூண்டியதாகவும் சட்டமேதை அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதோடு, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் போர்க்கொடி உயர்த்தினார்.

இதற்கு பதிலடி கொடுத்து ஷாம்பாஜி பீடே நேற்று சாங்கிலியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அடிப்படை ஆதாரமற்றவை

புனே வன்முறை தொடர்பாக நீதி அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுங்கள். விசாரணை அமைப்புகளுக்கு தலைமை வகிக்க எமனை கூட நியமனம் செய்யுங்கள். எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. விசாரணை நிறைவடைந்ததும், உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஷாம்பாஜி பீடே வெளியிட்ட அறிக்கையில், ‘‘பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. புனே கலவரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அனுமதி மறுப்பு

இதனிடையே, மும்பை லால்பாக்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஷாம்பாஜி பீடே கலந்து கொள்ள இருந்த கருத்தரங்குக்கு சட்டம்– ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, போலீசார் அனுமதி மறுத்தனர்.

மேலும் செய்திகள்