பெரும்பாலான பஸ்கள் இயங்காததால் தனியார் கல்லூரி பஸ்களில் பொதுமக்கள் பயணம்

சென்னை புறநகர் பகுதிகளில் பெரும்பாலான பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து தனியார் கல்லூரி பஸ்களில் பொதுமக்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

Update: 2018-01-05 22:02 GMT
தாம்பரம், 

13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி தொ.மு.ச., சி.ஐ.டி.யு உள்ளிட்ட 13 தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் இரவில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் பெரும்பாலான பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டதால் பஸ் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பஸ்கள் இல்லாமல் சிரமம் அடைந்தனர். இயக்கப்பட்ட சில பஸ்களும் குறித்த நேரத்துக்கு வரவில்லை.

இதை பயன்படுத்தி ஷேர் ஆட்டோக்களில் வழக்கத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தனர். இதனால் பல மணிநேரம் காத்திருந்து விட்டு பலர் வேலைக்கு செல்ல முடியாமலும், பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்களும் விடுமுறை எடுத்து வீடுகளுக்கு திரும்பிச்சென்றனர்.

தாம்பரம்

தாம்பரம், குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும், திருப்போருர், வாலாஜாபாத், மறைமலை நகர், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகரை ஓட்டியுள்ள பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக 350 பஸ்கள் இயங்க வேண்டிய நிலையில் 50 பஸ்கள் வரை மட்டுமே இயக்கப்பட்டதால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர் பகுதிகளில் பஸ்கள் கிடைக்காமல் காலையில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதிப்பட்டனர்.

தனியார் கல்லூரி பஸ்கள்

மிக குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டதை தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளை தொடர்பு கொண்ட தாம்பரம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், கல்லூரிகளில் உள்ள பஸ்களை, பயணிகளை ஏற்றிச்செல்ல அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து பல்வேறு கல்லூரிகளைச்சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் தாம்பரம் சானடோரியம் மற்றும் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச்சென்றனர். 

மேலும் செய்திகள்