கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் கோட்டை நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் கைது

சென்னையில் கோட்டை நோக்கி பேரணி சென்ற 380 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-01-05 23:15 GMT
சென்னை, 

தமிழகத்தில் வறட்சி பாதித்த அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். 2016-ம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு புள்ளியியல் துறை நிர்ணயம் செய்த அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும். கன்னியாகுமரி, கடலூர் மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்.கரும்பு விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாகவும், நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்ய வேண்டும். அத்திக்கடவு-அவினாசி, காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டை நோக்கி பேரணி

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஏ.சி. வெங்கடேசன், சென்னை மண்டல தலைவர் வேளச்சேரி குமார், சென்னைவாழ் காவிரி மக்கள் அமைப்பின் தலைவர் ஜி.அசோக் லோதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

இதையடுத்து பேரணியாக செல்ல முயன்ற 380 விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்கள் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அதன்பின்னர் விவசாயிகளுடைய கோரிக்கை மனுவை கோட்டையில் கொடுப்பதற்காக பி.ஆர்.பாண்டியன் உள்பட 5 நிர்வாகிகளை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்