உதவி செய்வது போல் நடித்து தொழிலாளியிடம் நகை, செல்போன் பறிப்பு 3 பேருக்கு வலைவீச்சு
உதவி செய்வது போல் நடித்து தொழிலாளியிடம் நகை, செல்போன் பறித்துசென்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
பூந்தமல்லி,
சென்னை சூளைமேடு, அவ்வை நகர், பாரி தெருவைச் சேர்ந்தவர் வரதன் (வயது 52). இவர், கட்டிடங்களுக்கு ‘டைல்ஸ்’ கற்கள் பதிக்கும் தொழிலாளி ஆவார். நேற்றுமுன்தினம் இரவு வளசரவாக்கம், ஆழ்வார்திருநகரில் வேலை முடிந்து மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் அருகே சென்ற போது பெட்ரோல் காலியாகி விட்டதால் மொபட்டை தள்ளிக்கொண்டு சென்றார்.
அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 மர்மநபர்கள், வரதனுக்கு உதவி செய்வது போல் அவரது மொபட்டை அங்கேயே நிறுத்தி விட்டு அவரை ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெட்ரோல் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
விருகம்பாக்கம் 80 அடி சாலை அருகே வந்தபோது திடீரென அந்த மர்மநபர்கள், வரதனை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் அவரிடம் இருந்த ஒரு செல்போனை பறித்துக்கொண்டு அவரை கீழே இறக்கி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவில் வந்த 3 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.