தட்சிணகன்னடா மாவட்டத்தில் அடிக்கடி கலவரம்: பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை

தட்சிணகன்னடா மாவட்டத்தில் அடிக்கடி கலவரம் ஏற்பட்டு வரும் நிலையில் பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை என்று மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

Update: 2018-01-05 21:00 GMT
பெங்களூரு,

தட்சிணகன்னடா மாவட்டத்தில் அடிக்கடி கலவரம் ஏற்பட்டு வரும் நிலையில் பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை என்று மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

கொடூரமான முறையில் கொலை

தட்சிண கன்னடா மாவட்டத்தில் இருதரப்பினர் இடையே அடிக்கடி கலவரம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த தொண்டர் தீபக் ராவ் (வயது 22) கடந்த 3-ந் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்பு உடையதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பை சேர்ந்தவர்கள் என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்கள்.

இதுபற்றி விசாரணையில் தான் தெரியவரும் என்று போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார். இந்த நிலையில் பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசை பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து பாகல்கோட்டையில் போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சந்தர்ப்பவாத அரசியல்

கர்நாடகத்தில் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை விதிக்கும் திட்டம் இல்லை. சித்தராமையா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிறகு இதுபற்றி ஆலோசனை நடத்துவோம். அந்த அமைப்புக்கு தடை விதிக்குமாறு பா.ஜனதா கூறுகிறது. ஆனால் கிராம பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அந்த அமைப்புடன் பா.ஜனதாவினர் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்றனர்.

பா.ஜனதாவினர் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார்கள். அது போல் நாங்கள் எந்த அமைப்புடனும் கூட்டணி வைக்கவில்லை. கடலோர மாவட்டங்களில் அடிக்கடி கலவரம் ஏற்படுவதற்கு பா.ஜனதா மற்றும் அங்குள்ள சில அமைப்புகள் தான் காரணம். பா.ஜனதாவினர் தேர்தலுக்காக இவ்வாறு செய்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு பா.ஜனதா தலைவர்கள் அமைதியாகி விடுவார்கள்.

தேர்தலில் ஆதாயம் பெற...

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைய நாங்கள் விடமாட்டோம். முந்தைய பா.ஜனதா ஆட்சியில் குற்றங்கள் அதிகமாக நடந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதன் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. தேர்தலில் ஆதாயம் பெற பா.ஜனதாவினர் மதக்கலவரத்தை தூண்டிவிடுகிறார்கள். இது சரியல்ல.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.

மேலும் செய்திகள்