வார்டு மறுவரையறை பட்டியலில் குளறுபடி: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை
நிலக்கோட்டை ஒன்றியத்தில் வெளியிட்டுள்ள வார்டுகள் மறுவரையறை பட்டியலில் பல்வேறு குளறுபடி செய்து இருப்பதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தி.மு.க.வினர் பலர் முற்றுகையிட்டனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை ஒன்றியத்தில் வெளியிட்டுள்ள வார்டுகள் மறுவரையறை பட்டியலில் பல்வேறு குளறுபடி செய்து இருப்பதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மாயாண்டி, செல்வராஜ் ஆகியோர் தலைமையில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இளங்கோ, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அழகர்சாமி, பாஸ்கரபாண்டியன் உள்பட தி.மு.க.வினர் பலர் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் வார்டுகள் மறுவரையறை பட்டியலில் மக்கள்தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருந்தால் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் வார்டுகளை மாற்றம் செய்ய பொதுமக்களிடம் கருத்து கேட்டிருக்கவேண்டும் என்று கூறினர்.
பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சதீஸ்பாபு, ஒன்றிய ஆணையாளர் லட்சுமிகலா ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது அவர்கள் இதுகுறித்து கலெக்டரிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தி.மு.க.வினர் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.