நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-05 21:00 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலையாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவி உயர்வுக்கு 10 ஆண்டு பணி மூப்பு என்பதை 6 ஆண்டாக குறைக்க வேண்டும், பொங்கல் பரிசு தொகை நாள் கணக்கில் கணக்கிட்டு ஊதிய சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்துக்கு பாளையங்கோட்டை வட்ட தலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார். செயலாளர் வேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் மாயாண்டி, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க வட்ட தலைவர் நாராயணன், கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் முத்தையா, வட்ட பொருளாளர் புதுப்பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம் - மானூர்

ஆலங்குளம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பலவேசமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குளம் தாலுகா பகுதியில் உள்ள கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

மானூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு மானூர் வட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். வட்ட அமைப்பு செயலாளர் பால்ராஜ் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் ராசையா, வட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் கணேசன் ஆகியோர் பேசினர். வட்ட பொருளாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

நாங்குநேரி- அம்பை

நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன்பு கிராம உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பை தாலுகா அலுவலக வளாகத்தில், வட்டார தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் ஜெபபாக்கியம் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் முருகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்