திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி

திருப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதியடைந்தனர். இதன்காரணமாக தனியார் பஸ்கள் நேற்று பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Update: 2018-01-05 22:00 GMT

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டதாக கூறி நேற்று முன்தினம் இரவு முதல் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் அரசு பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரில் 2 பணிமனைகளும், பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை ஆகியவற்றில் தலா ஒரு பணிமனையும் என 6 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் நேற்று பெரும்பாலானவர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் டிரைவர், கண்டக்டர் இல்லாமல் அரசு பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அரசு பஸ்கள் பணிமனை வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பணிமனைகளுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திருப்பூரில் டவுன் பஸ்கள் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. இதனால் திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் போதிய அரசு பஸ்கள் இல்லாமல் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதைத்தொடர்ந்து தனியார் பஸ்கள், மினிபஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டன. வழக்கமாக இயங்கும் தனியார் பஸ்களை விட, சுற்றுலா செல்லும் பஸ்களையும் வழித்தடங்களில் நேற்று இயக்கப்பட்டன. டவுன் பஸ்கள் பெருமளவு இயக்கப்படாததால் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் திருப்பூர் வருவதற்கும், திருப்பூரில் இருந்து கிராமத்துக்கு செல்வதற்கும் பெரிதும் சிரமம் அடைந்தார்கள்.

இதைத்தொடர்ந்து திருப்பூரில் இருந்து சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு தனியார் வேன், கார் போன்றவை இயக்கப்பட்டன. இதற்காக மக்களிடம் அதிகமாக பயணக்கட்டணத்தை அவர்கள் வசூலித்தனர். அதுபோல் சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி போன்ற வெளியூர்களுக்கும் மிக குறைந்த அளவில்தான் பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்காரணமாக வெளிமாவட்ட மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் வெளியூர் செல்வதை தவிர்த்தனர். இதன்காரணமாக காலை 10 மணிக்கு மேல் பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவை, ஈரோடு, கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் ரெயிலில் பயணம் செய்தனர். அதுபோல் வெளிமாவட்ட பயணிகளும் ரெயில் போக்குவரத்தை நம்பியே இருந்தனர்.

இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. தனியார் பஸ்கள், மினிபஸ்கள் தான் அதிக அளவில் இயக்கப்பட்டன. இருப்பினும் உரிய நேரத்தில் பஸ் வசதியில்லாமல் பொதுமக்கள் தவித்தனர். கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் பஸ் கிடைக்காமல் நீண்ட நேரமாக பஸ் நிலையங்களில் காத்திருந்ததை காண முடிந்தது. மாவட்டத்தில் 6 பணிமனைகளில் இருந்து 458 பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று 150 பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 70 சதவீதம் பஸ்கள் ஓடவில்லை.

வேலைநிறுத்தம் குறித்து அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல அதிகாரிகள் கூறும்போது, திருப்பூர் மாவட்டத்தில் அரசு பஸ்களை இயக்குவதற்கு தினக்கூலி அடிப்படையில் தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் மூலமாக பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்பூர், பல்லடம், காங்கேயம் பணிமனைகளில் தற்காலிக டிரைவர், கண்டக்டர் மூலமாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

கனரக லைசென்சு பெற்ற தனியார் பள்ளி பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு வந்திருந்தனர். இவர்களுக்கு ஒரு ஷிப்டுக்கு ரூ.255 சம்பளமாக வழங்கப்பட்டது. அரசு பஸ்களை இயக்கும் வகையில் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை அதிகப்படியாக பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் பெரும்பாலும் ஓடாததால் நேற்று பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அரசு பஸ்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இருக்கின்ற டிரைவர், கண்டக்டர்களை கொண்டு அந்தந்த பணிமனைகளில் இருந்து அரசு பஸ்களை வெளியே எடுத்துச்செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி டவுன் பஸ்களை பணிமனையில் இருந்து எடுத்து வந்த டிரைவர், கண்டக்டர்கள், அந்த பஸ்களை பஸ் நிலையங்களில் நிறுத்தி விட்டு ஆங்காங்கே நின்று கொண்டனர். இதனால் பணிமனையை விட்டு வெளியே வந்த அரசு பஸ்களும் முழு அளவில் இயக்கப்படவில்லை.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அரசு பஸ்களின் இயக்கம் முற்றிலும் முடங்கிப்போனது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட அரசு பணிமனைகளில் பணியாற்ற தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் தேவைப்படுகிறார்கள். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி தகுதியுள்ளவர்கள் திருப்பூர் பணிமனை 1, 2 மற்றும் பல்லடம், காங்கேயம், தாராபுரம், பழனி பணிமனை 1, 2, உடுமலை பணிமனை கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்