பணிக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கூறியதால் பெண் துப்புரவு பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
பணிக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கூறியதால், மும்பை மாநகராட்சி பெண் துப்புரவு பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மும்பை,
பணிக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கூறியதால், மும்பை மாநகராட்சி பெண் துப்புரவு பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலுடன் மாநகராட்சி தலைமை அலுவலகம் முன் உறவினர்கள் மற்றும் சக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்புரவு பணியாளர்மும்பை வில்லேபார்லே நேருநகர் பகுதியை சேர்ந்த தமிழ்பெண் சுமதி(வயது29). இவர் அந்தேரியில் உள்ள ‘கே’ வார்டில் கடந்த 10 வருடமாக மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். சுமதியின் கணவர் அவரை பிரிந்து சென்றுவிட்டார்.
சுமதிக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். தனக்கு கிடைக்கும் சம்பளத்தை கொண்டு வாடகை வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் சுமதியை பணிக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, தனக்கு தொடர்ந்து பணி தரும்படி அதிகாரிகளிடம் கெஞ்சி உள்ளார். ஆனால், அதிகாரிகள் அவரை துப்புரவு பணியில் ஈடுபடுத்த மறுத்துவிட்டனர்.
தற்கொலைஇதனால் சுமதி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். சுமதியின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள நேருநகரில் அவரது தாய் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர், சுமதியின் செல்போனுக்கு தொடர்புகொண்டார். ஆனால் சுமதி போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சுமதியின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாக தட்டியும் சுமதி கதவை திறக்கவில்லை.
இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுமதி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அவரது தாய் கதறி அழுதார். போலீசார் சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அதிகாரிகள் பணிக்கு வரவேண்டாம் என கூறியதால் மனமுடைந்து சுமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடலுடன் போராட்டம்இதையறிந்து அவரது உறவினர்களும், சக ஒப்பந்த பணியாளர்களும் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து நேற்று சுமதியின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நேராக சுமதியின் உடலை ஆம்புலன்ஸ் வேனில் எடுத்துக்கொண்டு சி.எஸ்.டி.யில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு மாநகராட்சி அலுவலகம் முன்பு சுமதியின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. அப்போது, சுமதியின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை அந்தேரியில் துப்புரவு பணியில் ஈடுபட மாட்டோம் என ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் அறிவித்தனர்.
பின்னர் சுமதியின் உடல் இறுதி சடங்கிற்காக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட சுமதியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா குமாரபாளையம் அருகே உள்ள கோட்டமேடு ஆகும்.