ஜூகுவில் ஜிக்னேஷ் மேவானி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு

மும்பை ஜூகுவில் ஜிக்னேஷ் மேவானி கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்

Update: 2018-01-04 23:00 GMT

மும்பை,

மும்பை ஜூகுவில் ஜிக்னேஷ் மேவானி கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்

அனுமதி மறுப்பு

மும்பை, ஜூகு தாமோதர் ரோட்டில் உள்ள ஒரு அரங்கில் நேற்று சாட்ரா பாரதி என்ற மாணவர் அமைப்பின் சார்பில் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் குஜராத் மாநில தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர்.

ஏற்கனவே கடந்த 2 நாட்களாக நடந்த வன்முறை, முழுஅடைப்பு போராட்டத்தால் மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் பேசுவதால் மேலும் பிரச்சினை ஏற்படலாம் என கருதப்பட்டது. இதையடுத்து போலீசார் ஜூகுவில் நடக்க இருந்த மாணவர் அமைப்பினர் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க மறுத்தனர்.

புனே போலீசார் வழக்குப்பதிவு

மேலும் நிகழ்ச்சி நடைபெற இருந்த அரங்கின் முன் பகுதியில் மக்கள் கூட தடை விதித்து உத்தரவிட்டனர். இதை கண்டித்து அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சிலரை போலீசார் கைது செய்து, அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 31–ந்தேதி பீமா– கோரேகாவ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித் ஆகியோர் கலந்துகொண்டனர். அங்கு அவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து விஸ்ராம்பாக் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்