முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது கிரண்பெடி பரபரப்பு புகார் பிரதமர் மோடிக்கு கடிதம்
புதுவை மாநில முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என பிரதமருக்கு கவர்னர் கிரண்பெடி பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி,
முதல்-அமைச்சராக நாராயணசாமி பொறுப்பேற்றது முதல் டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவைக்கு தேவையான நிதியை ஒதுக்கி தரும்படி வலியுறுத்தி வந்தார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தரும்படி அவர் கேட்டிருந்தார். இந்தநிலையில் தற்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று இருந்தார்.
அங்கு நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது மாநில வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மத்திய அரசு நிதி குறித்து பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையே கவர்னர் கிரண்பெடியும் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
கிரண்பெடி கடிதம்
இந்தநிலையில் பிரதமர் நரேந்திரமோடிக்கு, புதுவை கவர்னர் கிரண்பெடி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் பிரதமரை சந்தித்ததாக செய்தித்தாள்களில் படித்தேன். முதல்-அமைச்சர் தங்களிடம் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. முதல்-அமைச்சரும், சில அமைச்சர்களும் தொடர்ந்து பத்திரிக்கை வாயிலாகவும், பொதுமேடைகளிலும் கவர்னர் மாளிகை நலத்திட்ட உதவிகள் வழங்க தடையாக இருப்பதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது உண்மைக்கு அப்பாற்பட்டது.
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்குவது தொடர்பான கோப்பு கடந்த ஏப்ரல் மாதம் வந்தது. அந்த கோப்புக்கு அனுமதி தந்து என்னுடைய குறிப்புகளையும் எழுதி இருந்தேன். அதில் ஏழை மக்களுக்கு இலவச அரசி தரவும், வருமானம் அதிகம் உள்ளவர்களுக்கு அரிசி வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தேன்.
இலவச அரிசி
அதன்பிறகு கடந்த மே மாதம் அரிசி வினியோகம் தொடர்பான கோப்பு வந்தது. அந்த கோப்பிற்கு அனுமதி அளித்து முன்பு தெரிவித்த குறிப்புகளை செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். அதன்பின் ஜூன் மாதத்தில் கோப்பு வந்தது. அதற்கு அனுமதி தந்து விட்டு பொதுமக்களின் பணத்தை வீணாக்காமல் செயல்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தேன். மேலும் முன்பு கூறி இருந்த குறிப்பை செயல் படுத்த வேண்டும் என்ற தெரிவித்தேன். இதில் கவர்னர் மாளிகை என்ன சிக்கல் செய்துள்ளது?.
முதியோர் ஓய்வூதிய திட்டம் தொடர்பான கோப்பிற்கு உடனுக்குடன் அனுமதி தந்துள்ளோம். கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கோப்பு வந்த அன்றே அனுமதி தந்தேன். இந்த திட்டத்தின் மூலம் 1லட்சத்து 44 ஆயிரம் பயனாளிகள் உள்ளனர். அதில் குறிப்புகள் ஏதும் தந்ததே இல்லை.
இலவச சர்க்கரை
தீபாவளி பண்டிகைக்கு இலவச சர்க்கரை வழங்குவது தொடர்பான கோப்பு கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதி வந்தது. அதில் தனியார் ஆலையிடம் இருந்து எந்த டெண்டரும் இல்லாமல் சர்க்கரை வாங்குவது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கோப்பில் குறிப்பு எழுதி உடன் அனுப்பினேன். அதில், “நிதி சட்ட விதிகளுக்கு எதிராக இந்த கோப்பு உள்ளது. நிதித்துறையும் இதற்கு ஒப்புதல் தரவில்லை. முறைப்படி சரி செய்து விதிகளின்படி கோப்பினை அனுப்புங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், அதன்பிறகு அந்த கோப்பு மீண்டும் என்னிடம் வரவே இல்லை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை வினியோக விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நிறுவனமான கேந்த்ரிய பந்தர் துறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆதிதிராவிட மக்களுக்கான நிதியை மாற்றி உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த துறையின் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க செயலாருக்கு உத்தரவிட்டுள்ளேன். நலத்திட்ட உதவிகள் ஏழைகளுக்கு சென்றடையும் வகையில் நிதியை பயன்படுத்தவே கவர்னர் மாளிகை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.