மங்களூருவில் பா.ஜனதா தொண்டர் கொலை: மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் எம்.பி.க்கள் மனு

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கை கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

Update: 2018-01-04 21:46 GMT

பெங்களூரு,

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கை கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நடந்த பா.ஜனதா தொண்டர் கொலை வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

பதற்றமான சூழல் நிலவியது

தட்சிண கன்னடா மாவட்டத்தில் இந்துமத அமைப்பினர் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த தொண்டர்கள் அடிக்கடி கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சரத்மடிவாளா என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இருதரப்பினர் மோதிக்கொண்டதால், அங்கு மதக்கலவரம் வெடித்தது. இதனால் அங்கு ஒரு பதற்றமான சூழல் நிலவியது.

அதைத்தொடர்ந்து அதன் அண்டை மாவட்டமான கார்வார் மாவட்டத்தில் பரேஸ் மேஸ்கா என்ற வாலிபர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். அவரும் இந்துமத அமைப்பை சேர்ந்தவர். இதனால் கார்வார் மாவட்டத்திலும் மதக்கலவரம் உண்டானது. இதே போல் இதற்கு முன்பு 10–க்கும் மேற்பட்ட இந்துமத அமைப்பினர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகளின் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக பா.ஜனதா பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறது.

4 பேரை சுட்டுபிடித்தனர்

இந்த கொலைகள் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி கவர்னர் மற்றும் மத்திய உள்துறை மந்திரியிடம் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் ஏற்கனவே மனு கொடுத்தனர். இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மேலும் ஒரு பா.ஜனதா பிரமுகர் கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் பகுதியைச் சேர்ந்த பா.ஜனதா தொண்டரான தீபக்ராவ்(வயது22) என்பவரே நேற்று முன்தினம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்பினர் கைவரிசை காட்டி உள்ளதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

மத்திய மந்திரியிடம் மனு

இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை, ஷோபா, பிரதாப்சிம்ஹா உள்பட கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள் நேற்று நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், “கர்நாடகத்தில் தொடர்ந்து அரசியல் கொலைகள் நடைபெற்று வருகிறது. இப்போது பா.ஜனதாவை சேர்ந்த தீபக்ராவ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் அரசும் உதவியாக இருக்கிறது. இந்த கொலை குறித்து தேசிய புலனாய்வு விசாரணை அமைப்பின்(என்.ஐ.ஏ.) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்