லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சட்டமன்ற குழுவினர் ஆய்வு

லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களிடம், ஆலையை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று விவசாயிகள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-01-04 22:15 GMT
திருக்கனூர், 

திருக்கனூர் அருகே லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகையை தராமல் இருந்து வருகிறது. அதேபோல் மற்றும் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதம் கரும்பு அரவை தொடங்கி இருக்கவேண்டும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் தொடங்கவில்லை.

இந்த ஆலை நஷ்டத்தில் இயங்கி வருவதால்தான் இந்தநிலைமை. எனவே லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு, பொது கணக்குக்குழு ஆய்வு செய்து விவசாயிகள் மற்றும் ஆலை தொழிலாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்தது.

எம்.எல்.ஏ.க்கள் குழு ஆய்வு

அதன்படி சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் சிவா எம்.எல்.ஏ., பொதுகணக்கு குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, அசோக் ஆனந்து, எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு, வேளாண்துறை இயக்குனர் ராமமூர்த்தி, கூட்டுறவு பதிவாளர் சிவக்குமார் ஆலையை ஆய்வு செய்தனர். அப்போது ஆலையின் மேலாண்மை இயக்குனர் சாரங்கபாணி உடனிருந்தார்.

தொடர்ந்து சர்க்கரை ஆலை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் ஆலோசனை நடத்தினர். அப்போது கரும்பு விவசாயிகள், தங்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகையை வழங்கவேண்டும், தொடர்ந்து அரசே ஆலையை ஏற்று நடத்தவேண்டும். தங்களுக்கு வரவேண்டிய 10 மாத குத்தகை பாக்கியை தரவேண்டும், ஆலையை தனியாருக்கு விடக்கூடாது என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து ஆலையை அரசே ஏற்று நடத்த எம்.எல்.ஏ.க்கள் குழு பரிந்துரை செய்யும் என்று எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

ரூ.20 கோடி ஒதுக்க...

ஆய்வுக்கு பிறகு பொது கணக்குக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதவாது:-

கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக ஆலை தொழிலாளர்கள், விவசாயிகள், சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை முழுமையாக கேட்காமல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் விவசாயிகள், தொழிலாளர்களின் கருத்துகளை கேட்டோம். இந்த ஆலையை தொடர்ந்து அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று அறிக்கை அளிப்போம்.

ஆலையை ஒரு மாதத்துக்குள் இயக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கித்தர அரசை வலியுறுத்துவோம். ஆலையில் கரும்பு அரவை தொடங்காததால் நமது மாநில விவசாயிகள் தமிழக பகுதி சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை அனுப்புகின்றனர். அந்த உத்தரவை ரத்து செய்ய கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. புறக்கணிப்பு

கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக திருக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.பி.ஆர்.செல்வம் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இதில் அவர் போலீசாரால் தாக்கப்பட்டார். ஆனால் நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தை அவர் புறக்கணித்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, எம்.எல்.ஏ.க்கள் குழு ஆய்வு செய்ய வருவது பற்றி எனக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே அந்த ஆய்வு கூட்டத்துக்கு நான் செல்லவில்லை என்றார். 

மேலும் செய்திகள்