மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு சமயநல்லூரில் பேரணியுடன் தொடங்கியது

மதுரையை அடுத்த பரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 3 நாட்கள் மாநாடு சமயநல்லூரில் இருந்து பேரணியுடன் தொடங்கியது

Update: 2018-01-04 22:30 GMT
வாடிப்பட்டி,

மதுரை புறநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. முதல்நாள் நேற்றுமுன்தினம் பேரணியுடன் மாநாடு தொடங்கியது. அதன்படி சமயநல்லூரிலிருந்து ஊர்மெச்சிகுளம் வரை மாநாட்டு பேரணி நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் 2 கி.மீ. தூரம் கட்சி கொடி ஏந்தி வந்தனர்.

தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றியச்செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார். மாநிலசெயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், தங்கவேல், பொன்னுத்தாய் ஆகியோர் மாநாட்டின் நோக்கம் பற்றி விளக்கி பேசினர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், உமாமகேஸ்வரன் உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

கூட்டத்தில் பொதும்பு கிளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக விளையாட்டுகுழுவினரின் சிலம்பாட்டம், வன்னிவேலம்பட்டி தமிழன்னை கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. 2-வது நாளான நேற்று காலை பரவை மந்தைத்திடலில் தியாகிகள் நினைவு ஜோதி கொடி பெறும் நிகழ்ச்சி நடந்தது.

3-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) பரவை எம்.எஸ்.மகாலில் நிறைவு நாள் மாநாடு நடக்கிறது. அதில் புதிய மாவட்டக்குழு நிர்வாகிகள் தேர்வு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு, தகுதி ஆய்வு அறிக்கை மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் படுகின்றன. 

மேலும் செய்திகள்