திருப்பூர் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலையில் இருந்தே வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Update: 2018-01-04 23:00 GMT
திருப்பூர்,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். இல்லையென்றால் பிற பொதுத்துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை போன்று ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போதே அவர்களுக்கான பணபலன்களையும் சேர்த்து வழங்க வேண்டும்.

இலவச பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யும், மாணவ- மாணவிகள், மூத்த குடிமக்கள் மற்றும் இதர சலுகைகளால் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும்போது ஏற்படும் வருமான இழப்பை சரி செய்ய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டம், சாலை மறியல் மற்றும் வேலை நிறுத்த போராட்டத்திலும் திருப்பூர் மாவட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் ஜனவரி மாதம் 4-ந்தேதி (நேற்று) இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் சங்கங்களின் கோரிக்கைகள் மீது எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுகுறித்த தகவல்கள் நேற்று மாலை வெளியானது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக உடனடியாக அறிவித்தனர். அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அந்தந்த பஸ் நிலையத்திலேயே பஸ்சை நிறுத்தி விட்டு சென்றனர். பல பஸ்களை டிரைவர்கள் பணிமனையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்றனர். இதனால், பணிகள் முடிந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்சுக்காக காத்து நின்ற பயணிகளும், பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளும் பஸ்கள் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டனர்.

தங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றக்கோரி தொழிலாளர்கள் ஏராளமானோர் நேற்று இரவு காங்கேயம் கிராஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு திரண்டனர். பின்னர் அங்கு கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு.வின் திருப்பூர் மண்டல செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுமூக தீர்வு எட்டும் வகையில் பேச்சுவார்த்தையை அரசு நடத்த வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், தமிழக அரசு தங்கள் கோரிக்கை மீது அலட்சியம் காட்டி வருவதாகவும், இதனால் உடனடியாக சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கைகள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னறிவிப்பில்லாத இந்த வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயணிகள் தங்கள் பயணத்தை தொடர முடியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள். 

மேலும் செய்திகள்