காஞ்சீபுரம் வட்டாரத்தில் கடந்த ஆண்டு 2,103 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக தகுதியிழப்பு
காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனையில் கடந்த ஆண்டு 2,103 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள் கடந்த 2017-ம் ஆண்டு செய்யப்பட்ட வாகன தணிக்கை விவரம் குறித்து காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி எம்.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு 9 ஆயிரத்து 402 வாகனங்கள் வாகன தணிக்கை செய்யப்பட்டது. அதில் பல்வேறு குற்றங்களுக்காக 1,597 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. 331 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது. வாகனங்களுக்கு வரியாக ரூ.9 லட்சத்து 55 ஆயிரத்து 96-ம், அபராதமாக ரூ.20 லட்சத்து 84 ஆயிரத்து 190-ம் வசூலிக்கப்பட்டது. ரூ.37 லட்சத்து 44 ஆயிரத்து 668 அபராதம் அலுவலகம் மூலம் வசூலிக்க பரிந்துரை செய்யப்பப்டது.
115 ஆம்னி பஸ்களுக்கும், அதிகமாக பாரம் ஏற்றிவந்த 184 சரக்கு வாகனங்களுக்கும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற 214 வாகனங்களுக்கும் சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது.
2 ஆயிரத்து 103 பேரின் ஓட்டுனர் உரிமம்
குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய 603 பேரின் ஓட்டுனர் உரிமங்களும், உயிரிழப்பு ஏற்படுத்திய 129 பேரின் ஓட்டுனர் உரிமங்களும், போக்குவரத்து சிக்னலை மதிக்காத 167 பேரின் ஓட்டுனர் உரிமங்களும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 756 பேரின் ஓட்டுனர் உரிமங்களும், அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டிய 50 பேரின் ஓட்டுனர் உரிமங்களும், அதிக பாரம் ஏற்றி வந்த 184 பேரின் ஓட்டுனர் உரிமங்களும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிய 214 பேரின் ஓட்டுனர் உரிமங்களும் என்று மொத்தம் 2 ஆயிரத்து 103 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் 3 மாதம் முதல் 6 மாதங்கள் வரை தற்காலிக தகுதியிழப்பு செய்யப்பட்டது.
சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்க கூட்டங்கள் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் வாரம் ஒருமுறை நடத்தப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது. துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து ஓட்டுனர் உரிமம் பெற வருபவர்களுக்கு குறும்படம் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.