நெல்லை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் 28–ந் தேதி நடக்கிறது
நெல்லை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 28–ந் தேதி நடக்கிறது என நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 28–ந் தேதி நடக்கிறது என நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
போலியோ சொட்டு மருந்து முகாம்போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தியாவில் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடத்தப்படுவதன் காரணமாக இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளாக போலியோ நோய் தாக்கம் இல்லாமல் இருக்கிறது. இனிவரும் காலங்களிலும் இந்தியாவில் போலியோ நோய் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக வருகிற 28–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் மூலம் நெல்லை மாவட்டத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 360 குழந்தைகள் பயன்பெறுவார்கள். இரண்டாவது கட்டமாக வருகிற மார்ச் மாதம் 11–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு...கிராமப்புற பகுதிகளில் 1,496 மையங்களிலும், நகர்ப்புறங்களில் 150 மையங்களிலும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களிலும், இடம்பெயர்ந்து வாழும் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் செங்கல் சூளைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 20 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட மையங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கலாம். மேலும் புறவழிச்சாலை, சுங்கச்சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் முகாம் நடைபெற உள்ளது.
இந்த மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த 1,200 பணியாளர்களும், கல்வி துறையை சேர்ந்த 305 பேரும், சத்துணவு பணியாளர்கள் 3,189 பேரும், ரோட்டரி குழுவைச் சேர்ந்த 30 பேரும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 2,255 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 979 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பொதுமக்கள், தாய்மார்கள் அனைவரும் தங்களுடைய 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து கொடுக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.