விவசாயி வீட்டுக்குள் புகுந்து கொள்ளை: பணம் கேட்டு கெஞ்சிய கொள்ளையர்கள்

பொள்ளாச்சி அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் கொள்ளையர்கள் பணம் கேட்டு கெஞ்சியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2018-01-04 23:00 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே வடசித்தூர்-மெட்டுவாவி சாலையில் உள்ள மன்றாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 70). இவரது மனைவி கற்பகம் (68), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு திருமணம் ஆகி சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இளைய மகன் பிரபுராம் (33) பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பிரபுராமுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தூங்காமல் வீட்டிற்கு வெளியே வந்து வாந்தி எடுத்துள்ளார்.

இதை பார்த்த கொள்ளையர்கள் அவரை கத்தி முனையில் வீட்டிற்குள் அழைத்து சென்றனர். பின்னர் 3 பேரையும் கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்த 15 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள், ஒரு எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டு இருந்த காரை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தான் மறைந்து வைத்திருந்த செல்போன் மூலம் விவசாயி ஆறுச்சாமி நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் சம்பவ நடந்த 5 மணி நேரத்திற்குள் பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை, பணம் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த சுதன் (27), கனகராஜ் (35), செல்வராஜ் (30), புதுக்கோட்டையை சேர்ந்த ஆனந்த் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து, பொள்ளாச்சி ஜே.எம். 2 மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் மேலும் கூறியதாவது:-

திருச்சியை சேர்ந்த சுதன், கனகராஜ், செல்வராஜ் ஆகியோர் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக பழகி வந்தனர். திருச்சிக்கு ஜல்லிக்கட்டு பார்க்க வந்த போது, புதுக்கோட்டையை சேர்ந்த ஆனந்துக்கு மற்ற 3 பேரிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆனந்த் சில நாட்களுக்கு முன் இரும்பு பொருட்கள் எடுக்க விவசாயி ஆறுச்சாமி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் வயதானவர்கள் இருப்பதையும், ஒரு மகன் மட்டும் இருப்பதை அறிந்து கொண்டார். மேலும் வீடு தனியாக இருப்பதால் மிரட்டி கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளார். இதையடுத்து தனது நண்பர்களுடன் வந்து கொள்ளையடிக்க வந்துள்ளார்.

அப்போது ஆறுச்சாமியிடம் பணம் எங்கு உள்ளது என்று கேட்டு உள்ளனர்.

அதற்கு அவர் பணம் எதுவும் கையில் இல்லை வங்கியில் தான் உள்ளது என்று கூறி உள்ளார். அதற்கு அந்த 4 பேரும் முதலில் ரூ.2 லட்சம் வரை கேட்டு பார்த்து விட்டு, பின்னர் ரூ.1 லட்சம் கொடுங்கள் என்று கூறிஉள்ளனர். கடைசியாக ரூ.5 ஆயிரம் இருந்தால் கொடுங்கள் என்று சினிமா படத்தில் நடிகர் வடிவேலு பாணியில் கெஞ்சுவது போன்று கேட்டு உள்ளனர். ஆனால் வீட்டில் இருந்தவர் களை அடித்து துன்புறுத்த வில்லை.

4 பேரில் ஒருவர் மட்டும் பேசி உள்ளார். மற்ற 3 பேரும் கைகளை அசைத்து சைகை காண்பித்து உள்ளனர். அதன்பிறகே அவர்கள் வீட்டுக்குள் சென்று நகை, பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்