அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன்

உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெற்றவரும், அறிவியல் புரட்சியில் முக்கிய பங்காற்றிய ஒருவராகவும், விஞ்ஞானிகளுக்கு எல்லாம் விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர் சர் ஐசக் நியூட்டன்.

Update: 2018-01-04 06:00 GMT
-பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர்

இங்கிலாந்து நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த நியூட்டன் பள்ளி படிப்பை படிப்பதற்கே மிகவும் சிரமப்பட்டார். சிறுவயதில் இருந்தே அறிவியல் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த நியூட்டன், தண்ணீரில் வேலை செய்யும் கடிகாரத்தை அப்போதே கண்டுபிடித்தார். விடாது துரத்திய ஏழ்மையின் காரணமாக 14 வயதிலேயே பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அவருடைய மாமா நியூட்டனின் கல்வி ஆசை நிறைவேற உறுதுணையாக இருந்து உதவினார். அதன் மூலம் பள்ளி படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இளங்கலை பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை பல கோணங்களில் சிந்திக்க வைத்தது. நவீன கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை அவர் கண்டுபிடித்தார். பைனாமியல் தியரம் மற்றும் கால்க்குலஸ் எனும் நவீன கணிதத்தின் பிரிவுகளை கண்டறிந்தார்.

ஒரு முறை தோட்டத்தில் நடந்து செல்லும் போது ஆப்பிள் பழம் மரத்தில் இருந்து விழுவதை கண்டார். எல்லா காலகட்டத்திலும் வாழ்ந்த மனிதர்கள் பார்த்திருக்கும் காட்சிதான் அது. ஆனால் அது இயற்கை என்று எண்ணிவிட்டு செல்வார்கள். ஆனால் நியூட்டனோ அதை பற்றி சிந்தித்தார். ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத சக்திதான் ஆப்பிள் பழத்தை புவியை நோக்கி விழ செய்கிறது என்று கருதினார். விளைவு, புவி ஈர்ப்பு சக்தி என்ற ஒன்று இருப்பதால் தான், பொருட்கள் அனைத்தும் கீழே விழுகிறது என்பதை கண்டுபிடித்தார். இது அவருடைய கண்டுபிடிப்புகளில் மகத்தான சாதனையாகும்.

அதன் பிறகு நியூட்டனுக்கு டிரினிட்டி கல்லூரியில் கவுரவ பொறுப்பு வழங்கப்பட்டது. பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அதன் விளைவு தொலைநோக்கிகளை கண்டுபிடித்தார். இன்று பயன்படுத்தப்படும் பல்வேறு நவீன தொலைநோக்கிகள் அனைத்துமே நியூட்டனின் தொலைநோக்கியை அடிப்படையாக கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. டிரினிட்டி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும்போது உலக புகழ்பெற்ற ராயல் சொசைட்டியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். வண்ணங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் போது ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறுகண்ணை பார்க்கும் போது திடீரென்று வண்ணங்கள் மாற தொடங்கின. அது மட்டுமல்ல, தனது ஆராய்ச்சிக்காக தன் கண்ணால் வண்ணங்களை பார்க்கும் போது மாற்றம் தெரிகிறதா? என்று அடிக்கடி சோதித்து கொண்டார். அதனால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு பல நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை வந்தது. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதை நிரூபித்தார். இது நியூட்டன் விதி என்று அழைக்கப்படுகிறது.

21 முதல் 27 வயது வரை நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். அதன் பிறகு 1703-ல் ராயல் சொசைட்டியின் தலைவராக நியூட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1705-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி, நியூட்டனின் ஆராய்ச்சிகளை அறிந்து வியந்தார். அவருக்கு, “சர்” பட்டம் வழங்கி கவுரவப்படுத்தினார்.

அதன் பிறகு தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நியூட்டன், தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களால் அவதிப்பட்டார். 1727-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி நியூட்டன் இறந்தார். அவருக்கு போப் எழுதிய இரங்கில் குறிப்பு மிகவும் முக்கியமானது. அதில் ‘இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன. கடவுள் நியூட்டன் பிறக்கட்டும் என்றார். ஒளி பிறந்தது’ என குறிப்பிட்டு இருந்தார். இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் பொறிக்கப்பட்டுள்ளது.

நியூட்டன் பிறவியில் ஒரு மேதை. அதனால்தான் அவரால் இயற்கையின் விதிகளை கண்டுபிடித்து சொல்ல முடிந்தது. அத்தகைய மாமேதையின் சாதனைகள் மகத்தானவை, போற்றப்படக் கூடியவை என்றால் மிகையாகாது.

அப்போது வழக்கத்தில் இருந்த ஜூலியன் நாட்காட்டியின் படி அவர் 1642-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி பிறந்தார். கிரிகோரியன் நாட்காட்டியின்படி அவருடைய பிறந்த நாள் 4-1-1643 ஆகும்.

மேலும் செய்திகள்