இன்னும் பல மனோகரன்கள் இருக்கிறார்கள்

சென்னையில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் தம்பதியான மனோகரன்(வயது66), ஜீவா(62). இருவரும் தங்களது பொன்னான மேனியை தீக்கிரையாக்கி இந்த உலகத்தை விட்டே விடை பெற்று இருக்கிறார்கள்.

Update: 2018-01-04 05:30 GMT
இறந்த பின்னும் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்பதற்காக தங்களது ஈமக்கிரியை சடங்குக்கு கூட தனது கையெழுத்திட்ட காசோலையையும் விட்டு சென்று இருக்கும் மனிதநேயத்தை என்னவென்று கூறுவது?

இந்த தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகளான மகன், மகளின் வாழ்க்கை பயணம் திருப்திகரமாக இல்லை என்பதால் இவர்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள் என தகவல் கூறுகிறது. பெற்றோர்களுக்கு பாரமாக இருக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த தற்கொலை முடிவு காட்டுகிறது. பெற்றோர்கள் நல்ல வேலையில் இருந்து தங்களை படிக்க வைத்து ஆளாக்கிய பின்னரும் அந்த பெற்றோருக்கு நன்றிக்கடனாக இருக்காமல் பாரமாக இருக்கும் மகன்கள் இந்த நாட்டில் பல பேர் இருக்கிறார்கள்.

வாழ்நாள் முழுவதும் நமக்காக கஷ்டப்பட்ட பெற்றோரை இப்படி இந்த உலகத்தை விட்டே அனுப்பும் முடிவை எடுக்க வைக்காதீர்கள். பெற்றோர்கள் அவர்கள் உழைப்பில் வசதி, வாய்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அதை காக்க வேண்டுமே தவிர, அதனை அழிக்க முயற்சி செய்யாமலும் அவர்கள் தேடி வைத்த செல்வத்தை பாதுகாப்பதும் தான் ஒரு மகனின் கடமையாக இருக்க வேண்டும்.

எனவே இப்போது உயிரை மாய்த்த தம்பதியர் போன்று இன்னும் பல தம்பதியர் இந்த பூமியில் இருக்கலாம். இனியாவது இந்த மனோகரன் எடுத்த முடிவை மற்றொரு மனோகரன் போன்றவர்கள் எடுக்க விடாமல் தடுக்க ஒவ்வொரு மகன், மகளும் ஒரு சபதம் எடுத்து செயல்படுங்கள்.. இருக்கும் போதே பெற்றோரிடம் அன்பு செலுத்துங்கள். அரவணையுங்கள். இந்த உலகத்தில் பெற்றோருக்கு அடுத்து தான் கடவுள் என்பதால் பெற்றோர் ஆசி உங்களுக்கும் கிடைக்க நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பெற்றோரை கடவுளாக பாவித்து பணிவு காட்டுங்கள். இது போன்ற துயர சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

-மாயா

மேலும் செய்திகள்