மராட்டியத்தில் முழு அடைப்பு மும்பையில் 12 விமான சேவை ரத்து

மராட்டியத்தில் முழு அடைப்பு காரணமாக மும்பையில் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

Update: 2018-01-03 22:00 GMT

மும்பை,

மராட்டியத்தில் முழு அடைப்பு காரணமாக மும்பையில் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

விமான சேவை

புனேயில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது. இதையொட்டி, நேற்று மராட்டியத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, கடைகள் அடைக்கப்பட்டன. பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வன்முறை காரணமாக நேற்று மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில், 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதில், மும்பையில் இருந்து புறப்பட இருந்த 7 விமானங்களும், வெளியூர்களில் இருந்து மும்பைக்கு வர இருந்த 5 விமானங்களும் அடங்கும். இது தவிர, 235 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பெஸ்ட் பஸ்கள்

இதனிடையே, மும்பை விமான நிலையம் நோக்கி வந்த பெஸ்ட் பஸ்களை போராட்டக்காரர்கள் மறித்ததால், பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல இருந்த பயணிகள், பஸ் கிடைக்காமல் விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே சில மணிநேரம் சுற்றி வந்தனர்.

டாக்சி, ஆட்டோ ஏதும் ஓடாததால், அவர்கள் மணிக்கணக்கில் விமான நிலையத்தில் காத்திருந்தனர். மாலை 4 மணிக்கு பின்னரே நிலைமை சீரடைந்தது. விமான போக்குவரத்து தொடங்கியது.

மேலும் செய்திகள்