கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக நடிகர்கள் சுதீப், தர்‌ஷன், பிரகாஷ்ராஜ் பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக நடிகர்கள் சுதீப், தர்‌ஷன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

Update: 2018-01-03 21:30 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக நடிகர்கள் சுதீப், தர்‌ஷன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. கர்நாடக தேர்தல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் போட்டியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆளும் காங்கிரஸ் உள்ளது. ஏனென்றால் தற்போது அந்த கட்சி வசம் உள்ள பெரிய மாநிலம் கர்நாடகம் மட்டுமே. இதையும் பறிகொடுத்துவிட்டால் காங்கிரஸ் கட்சியின் நிலை இன்னும் படுமோசமாகிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்களும் இதே கருத்தை கூறுகிறார்கள்.

நாட்டில் 19 மாநிலங்களில் பா.ஜனதா மற்றும் அக்கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இருந்தாலும் அடுத்த ஆண்டு(2019) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பாக வெற்றிக்கனியை பறிக்க காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டால், பாராளுமன்ற தேர்தலிலும் அது எதிரொலித்துவிடுமோ என்று பா.ஜனதா கணக்கு போடுகிறது. மேலும் தென்இந்தியாவில் பலமாக கால் பதிக்க வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. எனவே, காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இரண்டு கட்சிகளுக்குமே கர்நாடகம் மிக முக்கிய மாநிலமாக இருக்கிறது.

காங்கிரசுக்கு ஆதரவாக நடிகர்கள் பிரசாரம்

இந்த நிலையில் பிரபல நடிகர்களின் புகழை பயன்படுத்த இரு கட்சிகளும் தீவிரமாக உள்ளது. அதில் காங்கிரஸ் சற்று முன்னணியில் இருப்பதாகவே தெரிகிறது. ஏனென்றால் கன்னட திரைத்துறையில் மிக பிரபலமாக இருக்கும் நடிகர்கள் சுதீப், தர்‌ஷன் ஆகியோர் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியாகியுள்ளன. மேலும் தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலமாக திகழும் நடிகர் பிரகாஷ்ராஜூம் காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.

சமீபகாலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் கொள்கை ரீதியாக பா.ஜனதாவை எதிர்த்து கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் அவர் காங்கிரசை ஆதரித்து களத்தில் இறங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதே போல் பா.ஜனதாவை ஆதரித்தும் நடிகர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். அதாவது நடிகர் கணேஷ் உள்பட பல நடிகர்கள் பிரசாரம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆகமொத்தம் கர்நாடக சட்டசபை தேர்தல் களம் திரை நட்சத்திரங்களால் ‘களை‘கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் செய்திகள்