காரில் கடத்தி வரப்பட்ட சாராயம்- மதுபாட்டில்கள் பறிமுதல் 4 பேர் கைது

நன்னிலத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 ஆயிரம் மதிப் பிலான சாராயம்-மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

Update: 2018-01-03 22:30 GMT
நன்னிலம்,

நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுதுரை, சப்- இன்ஸ்பெக்டர்கள் அனந்த கிருஷ்ணன், நாகராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஆண்டிப்பந்தல் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மாநில சாராயம் 70 லிட்டர், 130 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

விசாரணையில் அவர்கள், திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்த பிரசாத் (வயது 23), ஜான்பீட்டர் (23), மணிகண்டன் (31), ஆனந்த் (22) என்பதும், சாராயம் மற்றும் மதுபாட்டில்களை காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் என தெரிகிறது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் சாராயம், மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்