ரெயில் நிலைய நடைமேடையில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து படுகொலை

வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலைய நடைமேடையில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இக்கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-01-03 23:15 GMT
வேலூர்,

வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள ரங்கசாமிநகரை சேர்ந்தவர் முனியன் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வள்ளி. இவர்களுக்கு 7 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை முனியனுக்கும், அவருடைய நண்பர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினை குறித்து அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாலை 6 மணியளவில், முனியன் சவாரி முடித்து வீடு திரும்பினார். அதன் பின்னர் அவர் இரவு 7 மணியளவில் வெளியே சென்று விட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் 2-வது நடைமேடையின் கடைசியில் முனியன், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக்கண்ட ரெயில் நிலைய பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம், வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் முனியன் உடலை பார்வையிட்டனர். அவரது கால், கழுத்து, வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் காணப்பட்டன. சரமாரியாக கழுத்தில் வெட்டியும், பின்னர் கழுத்தை அறுத்தும் முனியன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், 4 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முனியனுக்கும், அவரது நண்பருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக முனியன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? என்பது உள்பட பல்வேறு விதங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரெயில் நிலைய நடைமேடையில் ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ரெயில் பயணிகள் மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்