சூலூர் அருகே பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி வடமாநில வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்

சூலூர் அருகே பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயன்ற வடமாநில வாலிபரை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-01-03 23:00 GMT

சூலூர்,

கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மனைவி ராதாமணி. இவர் தள்ளுவண்டியில் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் கடை யில் இருந்த போது வடமாநில வாலிபர்கள் 2 பேர் அங்கு வந்தனர். அவர் ராதாமணியிடம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டு பேச்சுக்கொடுத்தனர்.

அவர் தண்ணீர் எடுக்க திரும்பும் போது அந்த வாலிபர்கள் திடீரென்று தள்ளுவண்டியில் வெங்காயம் நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து ராதாமணி கழுத்தில் அணிந்திருந்த நகையை கேட்டு மிரட்டினர். அவர் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள், ராதாமணியின் கழுத்து மற்றும் கைகளில் கத்தியால் பலமாக குத்தினர்.

இதனால் வலியால் துடித்த அவர் கூச்சல் போட்டார். உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து வந்தனர். உடனே அந்த வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். இதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த வடமாநில வாலிபர் தன்னை பிடிக்க வந்த ஆறுகுட்டி என்பவரை கத்தியால் குத்தினார். இதில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து பொதுமக்கள் வடமாநில வாலிபரை சரமாரியாக தாக்கி சூலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவன் ஒடிசாவைச் சேர்ந்த துல்லா (வயது 27) என்பதும், அங்குள்ள தனியார் பஞ்சாலையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. காயம் அடைந்த துல்லா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பெண்ணை கத்தியால் குத்தி வடமாநில வாலிபர்கள் நகை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்