பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களுக்கு 2 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரிக்கை

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்ட செயலாளர் ராஜூ தலைமையில், மாவட்ட தலைவர் ஜார்ஜ், பொருளாளர் ஆறுமுகம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம், செயலாளர் செல்வன், பொருளாளர் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2018-01-03 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சுமார் 300 ஒப்பந்த தொழிலாளர்கள், வாடிக்கையாளர் சேவை, தொழில்நுட்ப பணி, அலுவலக பணி, டவர் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தினக்கூலி தொகை ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு சம்பளத்தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

எனவே அவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 2 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கவும், மாதந்தோறும் 7–ந் தேதி அன்று அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் கன்னியாகுமரி பகுதியில் பாசி மாலை விற்பனை செய்யும் நரிக்குறவ பெண்கள் ஏராளமானோர் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களில் பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் கொண்டு வந்த மனுவை வாங்கி கலெக்டரிடம் கொடுப்பதாகக்கூறி அனுப்பி வைத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நரிக்குறவர்களான எங்களது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஆகும். எங்களின் தொழில் பாசி மாலை விற்பனை செய்வதாகும். கன்னியாகுமரி பேரூராட்சி ஊழியர்கள் எங்களை அங்கு வியாபாரம் செய்ய விடுவதில்லை. அங்கு கடை வைத்திருப்பவர்கள் எங்கள் பொருட்களை வீசியெறிந்து, எங்களை கம்பியினால் அடிக்கிறார்கள். தற்போது அய்யப்ப பக்தர்கள் அதிகமாக வரும்போது எங்களுக்கு வியாபாரம் நடைபெறும். அய்யப்ப ஜோதி முடியும் வரை எங்களை தொழில் செய்ய அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்