மலைப்பகுதியில் இரட்டைக்கொலை நண்பரும் பிணமாக கிடந்தார்
ஆரல்வாய்மொழி அருகே சீதப்பால் மலையில் பிரபல கஞ்சா வியாபாரி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அவரது நண்பரும் வெட்டுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே சீதப்பால் எஸ்.ஏ. தெருவை சேர்ந்தவர் புனேஷ்மணி(வயது 35). இவருடைய மனைவி சூர்யா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, கோட்டார் ஆகிய போலீஸ் நிலையங்களில் கஞ்சா, அடிதடி என 16–க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும், ஆரல்வாய்மொழி போலீசில் 2 குண்டாசும், பூதப்பாண்டி போலீசில் ஒரு குண்டாஸ் வழக்கும் போடப்பட்டு சிறைக்கு சென்று திரும்பினார். கடைசியாக கோட்டார் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
புனேஷ்மணி குற்ற செயல்களில் ஈடுப்பட்டு போலீசார் தேடும்போது சீதப்பாலில் உள்ள மலையின் மேல் சென்று பதுங்கியிருப்பது வழக்கம். ஜாமீனில் வெளியே வந்த புனேஷ்மணி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தனது நண்பரான வடசேரி அருகுவிளையை சேர்ந்த ஷைன் என்ற ஷாஜியுடன் வீட்டிற்கு வந்தார்.
பின்னர், வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது மனைவி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் தனது தந்தை மணியிடம், சூர்யா கூறினார். புனேஷ்மணி வழக்கமாக பதுங்கியிருக்கும் இடமான சீதப்பால் மலையின் மேல் பகுதிக்கு மணி சென்று தேடினார். அப்போது, அங்குள்ள பாறையின் மீது புனேஷ்மணி கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், அவரது நண்பாரான ஷாஜி கழுத்திலும், முகத்திலும் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நாகர்கோவில் துணைபோலீஸ் சூப்பிரண்டு கோபி, இன்ஸ்பெக்டர்கள் ஜெயலெட்சுமி(ஆரல்வாய்மொழி), பென்சாம்(பூதப்பாண்டி), பர்னபாஸ்(வடசேரி), சப்–இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன், ஜான்கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, கொலை செய்யப்பட்ட இருவரும் மலையில் மேல் பகுதியில் உள்ள பாறையில் காலணிகளை கழற்றி வைத்து விட்டு தூக்கியபோது நள்ளிரவில் 3–க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கொண்ட மர்மகும்பல் கழுத்தை அறுத்து இந்த கொடூர கொலையை செய்திருப்பது தெரியவந்தது.
பின்னர், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து புனேஷ் மணியின் அக்காள் மகன் மாணிக்கம் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக கூறியுள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.