வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதை கண்டித்து ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-02 22:45 GMT
வாரியங்காவல்,

ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகள் இருந்தன. தற்போது மீண்டும் அதே 21 வார்டுகள் அமைக்கப்பட்டு 33 ஆயிரத்து 899 பேர் மறு வரையறை செய்து ஒரு வார்டுக்கு 1,614 பேர் வீதம் இருப்பது போல செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெயர் ஒரு வார்டில் இருந்து 2, 3-வது வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று இதுபற்றி அறிந்த 10-வது வார்டு பொதுமக்கள் தங்களை 8-வது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அலுவலர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை வரைவு குறித்து கருத்து தெரிவிக்க ஜனவரி 2-ந்தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டு இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி தினசரி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினர். அப்போது 31-ந்தேதி ஞாயிற்றுக் கிழமையாகவும், ஜனவரி 1-ந்தேதி அரசு விடுமுறை தினமாகவும் இருந்ததால் கருத்து தெரிவிக்க இயலாது எனவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் பொதுமக்கள், தங்கள் கருத்துகளை தெரிவிக்க 15 தினங்களுக்கு முன்பாகவாது தெரிவித்திருக்க வேண்டும், நேற்றுடன் கடைசிநாள் என்பதால் ஏற்றுக்கொள்ள இயலாது, ஒரு வார்டில் உள்ளவர்களை மீண்டும் அதே வார்டில் சேர்க்க வேண்டும். 1,614 பேருக்கு மேல் இருப்பவர்களை வார்டில் இருந்து வெளியில் இருக்காமல் மறு வரையறை செய்யப்படவேண்டும் என்று கூறினர். இதுகுறித்து உங்களது கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக எழுதி கொடுங்கள் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்