கரூரில் பூட்டிய வீட்டில் 7½ பவுன் நகைகள்- பணம் திருட்டு

கரூரில் பூட்டிய வீட்டில் 7½ பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-01-02 22:30 GMT
கரூர்,

கரூர் காந்திகிராமத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பழனியப்பன்(வயது 68). இவர் தனியார் சிமெண்டு ஆலையில் விற்பனை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவியுடன் கொல்கத்தாவில் உள்ள அவரது மகளை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை பழனியப்பனின் மகன் ராமநாதன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் கலைந்திருந்தது.

நகைகள்- பணம் திருட்டு

பீரோவில் வைத்திருந்த 7½ பவுன் நகைகள் மற்றும் ரூ.76 ஆயிரம் திருடு போயிருந்தது. இது குறித்து பசுபதிபாளையம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகைகள், பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்