தூத்துக்குடியில்,கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2018-01-02 23:00 GMT

தூத்துக்குடி,

மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி, அதற்கான மசோதாவை தாக்கல் செய்து உள்ளது. இந்த மசோதா நவீன சிகிச்சை முறைகளை 6 மாத பயிற்சி வகுப்புக்கு பிறகு அனைத்து வழிமுறை மருத்துவர்களும் செய்ய வழி வகுக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் உறுப்பினர் ஆவதை தடுத்து, பிறதுறையை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சித்துறை நிர்வாகிகள் நியமிக்கப்படுவதை ஊக்குவிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ கழகம் சார்பில், அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட இந்திய மருத்துவ கழகம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதில் 175 அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு மட்டும் செயல்படாமல் இருந்தது. தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டாக்டர் குமரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். புதிய மசோதாவை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் மோசஸ், இன்பராஜ், அருள்பிரகாஷ், மும்மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்