‘பிரதமர் மோடி எங்களது கோரிக்கைகளை கேட்க வேண்டும்’ சிதம்பரம் நடராஜரிடம் பூஜை செய்ய திரண்டு வந்த விவசாயிகள்
பிரதமர் மோடி எங்களது கோரிக்கைகளை கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிதம்பரத்தில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜரிடம் நோட்டீசை வைத்து பூஜை செய்ய திரண்டு வந்த விவசாயிகளால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. விழாவில் நடராஜரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்து இருந்தனர். இந்த நிலையில் திடீரென்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 10–க்கும் மேற்பட்ட விவசாயிகள் சிதம்பரம் புதுத்தெருவில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
இவர்கள் வடக்கு வீதியில் வந்த போது, உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது விவசாயிகளிடம், நீங்கள் போராட்டம் செய்வதற்காக வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது, எனவே கோவில் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சாமிதரிசனம் செய்ய வந்த விவசாயிகள் கையில், கோரிக்கைகள் அடங்கிய நோட்டீஸ்களை வைத்து இருந்தனர்.
அதில், விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வரை அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், தனிநபர் பயிர் காப்பீடு வழங்க வேண்டும், நதிகளை நீர் வழிச்சாலை மூலமாக இணைக்கவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி குண்டாறு, காவிரி அய்யாறு இணைப்பு கோரியும், தங்களது கோரிக்கைகள் குறித்து டெல்லியில் 141 நாட்கள் போராடியும் மத்திய அரசு விவசாயிகளை பார்க்காமல் இருந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அய்யாக்கண்ணு உள்பட அவருடன் வந்த விவசாயிகள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆருத்ரா தரிசனம் அளிக்கின்ற நடராஜரே விவசாயிகளை காப்பாற்றுங்கள், பிரதமர் மோடி எங்களை சந்தித்து, விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்க வேண்டும், அதை நிறைவேற்ற வேண்டும்.
தேர்தலின் போது தெரிவித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி மறந்துவிட்டார். அதை அவருக்கு ஞாபகம் ஊட்டுங்கள் சிவனே, நல்ல எண்ணங்களை கொடுங்கள் என்று நடராஜரிடம் வேண்டி, நோட்டீசை வைத்து பூஜை செய்ய வந்தோம். எங்களது கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். அடுத்ததாக ஏப்ரல் மாதம் டெல்லி சென்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் 100 நாள் நடைபயணம் செல்ல இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகளின் திடீர் போராட்டத்தால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.