ஆண்டிப்பட்டி அருகே பயங்கரம்: டீக்கடையில் காரை மோத விட்டு தந்தை, மகள் கொலை

ஆண்டிப்பட்டி அருகே டீக்கடையில் காரை மோதவிட்டு தந்தை, மகள் கொலை செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்த மகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Update: 2018-01-02 23:00 GMT

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டி ஊராட்சி ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் செல்வராஜ் (வயது 45). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு அழகம்மாள் (40) என்ற மனைவியும், அன்புச்செழியன் (11) என்ற மகனும், அபிராமி (9) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.

அதே ஊரை சேர்ந்தவர் ரமேஷ்குமரன் (35). இவருக்கும், செல்வராஜுக்கும் இடையே பொது இடத்தில் டீக்கடை நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேரும் மோதிக்கொண்டனர். இதையொட்டி இரண்டு பேரையும் கண்டமனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு செல்வராஜ், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கந்துவட்டி கொடுமையால் அவதிப்படுவதாக கூறி, மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை காப்பாற்றினார்கள். இது தொடர்பாக தற்கொலைக்கு முயன்றதாக செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செல்வராஜ் ஊருக்கு வெளியே சிறிய டீக்கடை நடத்தி வந்துள்ளார். அதே பகுதியில் ரமேஷ்குமரனும் டீக்கடை நடத்தி வந்தார். ஒரே பகுதியில் டீக்கடை நடத்துவது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் செல்வராஜ் தனது டீக்கடையில் வேலை செய்து கொண்டு இருந்தார். அவரது மகனும், மகளும் கடையில் இருந்துள்ளனர்.

அப்போது ரமேஷ்குமரன் ஒரு காரில் வேகமாக வந்து டீக்கடையில் மோதினார். இதில் டீக்கடையில் இருந்த செல்வராஜ், அவருடைய மகள் அபிராமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அன்புச்செழியன் படுகாயம் அடைந்தான். உடனே ரமேஷ்குமரன் காரை அதே இடத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் ஆண்டிப்பட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு குலாம், கண்டமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதில் பலத்த காயம் அடைந்த அன்புச்செழியனும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த இரட்டை கொலை குறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமரனை உடனடியாக கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக காரை ஏற்றி தந்தை, மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்