தேசிய மருத்துவ ஆணைய மசோதா மத்திய அரசின் தவறான போக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். மத்திய அரசின் தவறான போக்கு காரணமாக போலி டாக்டர்கள் உருவாகும் நிலை உள்ளது என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
கும்பகோணம்,
தமிழகத்தில் பதவியில் இருப்பவர்கள் மத்திய அரசை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஆர்.கே.நகர் மக்கள் எனக்கு வெற்றியை கொடுத்து உள்ளனர். கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய இடங்களில் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்பாக சட்டசபையில் குரல் கொடுப்பேன்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா மூலம் மாநில சுயாட்சியில் மத்திய அரசு தலையிடுவதால், மருத்துவர்கள் போராடி வருகின்றனர். மத்திய அரசின் தவறான போக்கு காரணமாக போலி டாக்டர்கள் உருவாகும் நிலை உள்ளது. ‘‘நீட்’’ தேர்வு காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் மாணவி அனிதா மரணம் அடைந்தார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.
முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், முஸ்லிம் மத தலைவர்களிடம் கருத்துகளை கேட்க வேண்டும்.
18 எம்.எல்.ஏ.க்கள் முதல்–அமைச்சரை மாற்ற வேண்டும் என்றபோது, முதல்–அமைச்சரிடம் பெரும்பான்மையை நிரூபியுங்கள் என கவர்னர் கூறியிருக்க வேண்டும். ஆனால் கவர்னர் அது உள்கட்சி பிரச்சினை என்று கூறினார். இந்த ஆட்சியை தமிழக மக்கள் விரும்பவில்லை.
தமிழக கவர்னரின் நடவடிக்கை தமிழக வரலாற்றில் கேள்விப்படாத நடைமுறையாக உள்ளது. கவர்னரின் செயல்பாடு தவறான முன் உதாரணம் ஆகும். முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் பதவி மட்டுமே போதும் என்று நினைக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தும் முதல்–அமைச்சரால் வெற்றி பெறமுடியவில்லை.
தினகரன் பணம் கொடுத்து வெற்றி பெற்றார் என பேசி வருகிறார். அங்குள்ள மக்கள் கொஞ்சம் யோசனை செய்திருந்தால், ஆளுங்கட்சிக்கு டெபாசிட் கிடைத்திருக்காது. மக்கள் விரும்பாத ஆட்சி விரைவில் கலையும்.
இவ்வாறு அவர் கூறினார்.