ராமேசுவரம் நகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம்

ராமேசுவரம் நகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-01-02 22:00 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமீபத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை அளவீடு செய்து கூடுதலாக வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த கூடுதல் வரி விதிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தியுள்ளதோடு அன்றைய நாள் முதல் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக செலுத்தும்படி நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழர் தேசிய முன்னணி ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சந்திரன், செயலாளர் நாகராஜ், துணை தலைவர் குணசேகரன், ஆலோசகர் ஜான்பாய் மற்றும் சங்க உறுப்பினர்கள் நகராட்சி ஆணையாளரை சந்தித்து சொத்து வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், நிலுவை தொகையை செலுத்தக்கோரி நோட்டீசு வினியோகம் செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

அதன்படி நேற்று தி.மு.க. நகர் பொறுப்பாளர் நாசர்கான், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன், த.மா.கா. நகர் தலைவர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி முருகானந்தம், இந்து மக்கள் கட்சி பிரபாகரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சிவா, மாவட்ட குழு வடகொரியா, தே.மு.தி.க. நகர் தலைவர் முத்துக்காமாட்சி, நாம் தமிழர் கட்சி டோமினிக் ரவி, பா.ஜ.க. சார்பில் சுந்தரம் வாத்தியார், நகர் தலைவர் ஸ்ரீதர், ம.தி.மு.க. சார்பில் பாஸ்கரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஜெரோன்குமார், தமிழர் தேசிய முன்னணி சார்பில் கண் இளங்கோ, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் செய்யது இபுராம்சா உள்பட ஏராளமானோர் ஆணையாளரை சந்தித்து மனு கொடுப்பதற்காக ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.

அப்போது நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் அங்கு இல்லாததால் அனைவரும் அலுவலகத்துக்கு முன்பாக காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஆணையாளர் அங்கு வந்ததும் அவரிடம் சொத்து வரி உயர்வை குறைக்கவேண்டும். வார்டு மறுவரையறை குறித்து அனைத்து கட்சியினர் கருத்தை கேட்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு வார்டு மறுவரையறை தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்