வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி கொலுசு திருடியவர் கைது

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி கொலுசுகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-01 23:29 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஒண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் மதன்(வயது 35). இவர், கடந்த 30–ந் தேதி வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள வங்கிக்கு சென்றார். மதியம் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு பவுன் தங்க மோதிரம், வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து அவர், மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

அதில் மதன் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசுகளை திருடியது தொடுகாட்டை சேர்ந்த செல்வம்(31) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்