கவர்னர் மாளிகையின் பணிகள் இந்த ஆண்டும் தொடரும் கிரண்பெடி உறுதி

கவர்னர் மாளிகையின் பணிகள் இந்த ஆண்டும் தொடரும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Update: 2018-01-01 23:30 GMT

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

புதுவைக்கு எது தேவையோ, எது சாதகமானதோ அதை நாங்கள் செய்து வருகிறோம். கடந்த 18 மாதங்களாக இதுதான் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ராஜ்நிவாஸ் டீம் (கவர்னர் மாளிகை குழு) மக்களுக்கு தேவையானதையே செய்து வருகிறது. புதுவையை சுத்தமனதாக, பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையானதை செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

மக்கள் எதற்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து தரப்பு மக்களுக்காகவும் கடுமையாக உழைத்துள்ளோம். கவர்னர் மாளிகை குழு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பிரச்சினைகளை நேரில் சென்று பார்வையிட்டது. விமர்சனங்கள் எழுந்தபோதும் மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தது.

நாம் ஏன் வளங்களை வீணடிக்க வேண்டும்? மக்கள் கவர்னர் மாளிகையை நம்பி வருகின்றனர். அனைத்து தரப்பினரின் தேவைகளை நிறைவேற்றும் இடமாக கவர்னர் மாளிகை உள்ளது.

கவர்னர் மாளிகையின் பணிகள் இந்த ஆண்டும் தொடரும். அதற்கு தகுந்தாற்போல் முடிவுகளும் கிடைக்கும். இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்