பாதாள சாக்கடை குழியில் இருந்து வெளியேறிய கழிவுநீர் கடலூர் இம்பீரியல் சாலையில் ஆறாக ஓடியது

கடலூர் நகராட்சியில் பாதாளசாக்கடை திட்டம் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னமும் முழுமையாக செல்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

Update: 2018-01-01 21:45 GMT

கடலூர்,

கடலூர் நகராட்சியில் பலகோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பாதாளசாக்கடை திட்டம் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னமும் முழுமையாக செல்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளது. நகரில் பல இடங்கில் பாதாள சாக்கடை திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழிகளின் மேல் மூடிகள் உடைந்து குண்டு, குழிகளாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.

இது ஒருபக்கம் இருக்க, தற்போது பாதாளசாக்கடை குழாய்களில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பொங்கி சாலையில் வழிந்தோடுகிறது. அந்த வகையில் கடலூர் இம்பீரியல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதாளசாக்கடை குழிகள் சில இடங்கில் இருந்து கழிவுநீர் பொங்கி சாலையில் வழிந்தோடி வருகிறது.

நேற்று பகல் 12 மணியளவில் கடலூர் கூட்டுறவு அச்சகத்துக்கு அருகே இருக்கும் சின்னவாய்க்கால் பாலம் அமைந்துருக்கும் இடத்தில் பாதாளசாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் பொங்கி, சாலையில் ஆறாக வழிந்தோடியது. முதலில் லேசாக கசிந்த கழிவுநீர் நேரம் செல்ல செல்ல ஊற்று தண்ணீரை போல குபு, குபு என பொங்கி ஆறாக வழிந்தோடி சாலையோரம் பள்ளமான பகுதியில் குளம்போல தேங்கி நின்றது.

இது அந்த வழியாக சென்ற பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது. துர்நாற்றம் வீசியதால் பாதசாரிகள் கைகளால் மூக்கை பிடித்துக்கொண்டும், கைக்குட்டையால் முகத்தை மூடியபடியும் சென்றனர். அதிவேகமாக சென்ற வாகனங்கள் பாதசாரிகள் மீது கழிவுநீரை வாரி இறைத்துச் சென்றன.

கடலூர் நகரின் பிரதான சாலையாக இருக்கும் இம்பீரியல் சாலையில் பாதாளசாக்கடையில் இருந்து கழிவுநீர் பொங்கி வழிந்தோடினால், நகரின் உள்பகுதிகளில் உள்ள பாதாளசாக்கடை குழிகள் எந்த நிலையில் உள்ளனவோ என்பதை நினைத்து பார்க்க வேதனையாக இருக்கிறது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். சுகாதார சீர்கேடு ஏற்பாடாமல் தடுக்கும் வகையில், இதை உனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்