கள்ளக்குறிச்சியில் அரிவாளால் வெட்டி வக்கீல் படுகொலை

கள்ளக்குறிச்சியில் மர்மகும்பலால் அரிவாளால் வெட்டி வக்கீல் படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2018-01-01 22:00 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென்கீரனூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(வயது 40). வக்கீல். இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு சூர்யா, ஸ்ரீராம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் சூர்யா கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8–ம் வகுப்புரம், அதே பள்ளிக்கூடத்தில் ஸ்ரீராம் 5–ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு ஜெயபிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சிக்கு வந்தார். அங்கு சில பொருட்களை வாங்கிக்கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் 11.30 மணிக்கு தென்கீரனூர் நோக்கி அவர் புறப்பட்டார்.

கள்ளக்குறிச்சி அண்ணாநகருக்கும், தென்கீரனூருக்கும் இடையே சென்றபோது, அந்த வழியாக வாகனங்களில் வந்த மர்மகும்பல் திடீரென ஜெயபிரகாசை வழிமறித்தது. அந்த பகுதி இருளாக இருந்ததால் ஜெயபிரகாஷ், செய்வதறியாமல் திகைத்துப்போனார்.

உடனே அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அதற்குள் அந்த கும்பல், ஜெயபிரகாசை சுற்றி வளைத்தது. பின்னர் அந்த கும்பல், அரிவாளால் ஜெயபிரகாசை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து, துடிதுடித்து இறந்தார்.

அவர் இறந்ததை உறுதி செய்ததும், அந்த கும்பல் அங்கிருந்து மின்னவேல் வேகத்தில் வாகனங்களில் தப்பிச்சென்றது. இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜெயபிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயபிரகாசை அரிவாளால் வெட்டிக்கொன்ற கும்பல் யார்?, எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்