தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவை ரத்து செய்யக்கோரி டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம்

தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவை ரத்து செய்யக்கோரி டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் இன்று மூடப்பட உள்ளன.

Update: 2018-01-01 22:15 GMT

தேனி,

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். அதன்படி, தேனி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனியார் மருத்துவமனைகளை அடைத்து டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கம் கம்பம் பள்ளத்தாக்கு கிளை செயலாளர் டாக்டர் தியாகராஜன் கூறியதாவது:–

இந்தியாவில் மருத்துவத்துறையை கண்காணித்து, மருத்துவ வளர்ச்சியில் பணியாற்றும் ஜனநாயக முறையிலான மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, தன்னிச்சையாக தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா பல்வேறு மருத்துவ அமைப்புகளின் எதிர்ப்பை மீறி மத்திய அரசால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதுவரை உள்ள அமைப்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்கலைக்கழகம், அரசு மற்றும் பதிவு செய்த டாக்டர்கள் சார்பில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர்.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் எல்லா கட்டமைப்பு மற்றும் பேராசிரியர்கள் நியமனங்களை சரிவர செய்யாத கல்லூரிகளை இந்திய மருத்துவ கவுன்சில் ஆண்டுதோறும் ஆய்வு செய்து தகுதியில்லாத கல்லூரிகளை தடை செய்து வந்தது. இனிமேல், தேசிய மருத்துவ கவுன்சிலின் ஒரு முறை அங்கீகாரம் பெற்ற பின் அந்த மருத்துவ கல்லூரிகள் தன்னிச்சையாக மருத்துவ காலி இடங்களை உயர்த்தலாம், உயர் மருத்துவ பட்டப்படிப்புகளை தொடங்கலாம், ஆண்டு தோறும் நடைபெறும் பரிசோதனை கிடையாது, 60 சதவீதம் மாணவர்களுக்கான கட்டணத்தை கல்லூரியே நிர்ணயம் செய்யலாம் என தனியார் கல்லூரிகளுக்கு சாதகமான பல நிலைகளை அரசியல் காரணங்களுக்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளிநாட்டு டாக்டர்கள் இந்தியாவில் தேர்வு எழுத வேண்டும். ஆனால், இந்த மசோதாவில் வெளிநாட்டு டாக்டர்கள் தேர்வு இன்றி பணியாற்றலாம் என தளர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவை இந்திய மருத்துவ சங்கம் முழுமையாக எதிர்க்கிறது. எனவே, தேசிய மருத்துவ கவுன்சிலை கைவிட வேண்டும், டாக்டர்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்தவர்கள் மட்டுமே டாக்டர்கள் ஆக வேண்டும், ஆங்கில மருத்துவத்தில் கலப்படம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட உள்ளார்கள்.

தேனி மாவட்டத்தில் 829 டாக்டர்கள் உள்ளனர். சுமார் 300 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இந்த டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்வதோடு, மருத்துவமனைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும். அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவார்கள். வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவை ஒரு மணி நேரம் புறக்கணிக்கும் போராட்டத்தையும் நடத்த உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்