மரங்களை வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தக சபையை முற்றுகையிட்ட 18 பேர் கைது
மரங்களை வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தக சபையை முற்றுகையிட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை வர்த்தக சபைக்கு சொந்தமான கரிகுடோனில் நின்ற பல மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இந்த மரங்களை வெட்டி அகற்றி விட்டு அந்த இடத்தை வாடகை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வர்த்தக சபையின் இடத்தில் உள்ள மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, பெரியார் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் வர்த்தகசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி நேற்று காலை பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தில் வர்த்தக சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கோகுல்காந்திநாத் தலைமை தாங்கினார். போராட்டத்தில் அலைகள் மற்றும் பெரியார் திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளர்கள் சிவராஜ், செல்வராஜ், சுரேஷ், ராஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரிக்குடோனில் நின்றுகொண்டு இருந்த மரங்களை சட்ட விரோதமாக வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்தனர்.