மண் மூடியதால் தண்ணீர் தேங்குவது இல்லை சித்திரைசாவடி தடுப்பணை தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
மண் மூடி தண்ணீர் தேங்காத நிலையில் உள்ள சித்திரசாவடி தடுப்பணையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் வழியாக பாய்ந்து, காவிரி ஆற்றில் கலக்குகிறது. இந்த ஆற்றில் மொத்தம் 23 தடுப்பணைகள் உள்ளன. அதில் முதல் தடுப்பணையாக கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள சித்திரசாவடி தடுப்பணை தான்.
இந்த தடுப்பணை முழுவதும் கற்களால் கட்டப்பட்டு உள்ளது. நமது நாட்டில் மன்னர்கள் ஆட்சி செய்த போது இந்த தடுப்பணை கட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தடுப்பணை மூலம் ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது.
30 அடி ஆழம் கொண்ட இந்த தடுப்பணை மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. ஆனால் தற்போது அணை முழுவதும் மண் மூடிவிட்டன. இதனால் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் தடுப்பணையில் தேங்கி நிற்க முடியாத நிலை உள்ளது. வருகிற தண்ணீர் அனைத்தும் அப்படியே ஆற்றில் சென்று விடும் நிலை இருக்கிறது.
எனவே இந்த தடுப்பணையை தூர்வாரி அதில் நிறைந்திருக்கும் மண்ணை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தாலும் மாவட்ட நிர்வாகம் இதுவரை கண்டுகொள்ளவில்லை. எனவே இந்த தடுப்பணையை தூர்வாரி, அதில் உள்ள மண்ணை அகற்றி, ஆழப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:–
‘பேரூர் பெரியமகள் வந்தால் தான் காவிரி ஆற்றுக்கு சிறப்பு’ என்று முன்னோர்கள் கூறுவது உண்டு. அதாவது நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, காவிரி ஆற்றில் கலந்தால்தான் காவிரி கரைபுரண்டு ஓடும். அந்த அளவுக்கு நொய்யல் ஆற்றில் தண்ணீர் ஓடிய பெருமை மிகுந்த காலம் உண்டு. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஆற்றில் எப்போதுமே தண்ணீர் சென்று கொண்டுதான் இருந்தது.
ஆற்றுக்கு வரும் நீரோடைகளில் ஆக்கிரமிப்பு, போதிய மழை இல்லாமை போன்ற காரணத்தால் நொய்யல் ஆறு தண்ணீர் இல்லாமல் வறண்டுபோனது. அவ்வப்போது மேற்குதொடர்ச்சி மலையில் மழை பெய்தாலும், அந்த தண்ணீர் சித்திரைசாவடி தடுப்பணை வரை வரும். ஆனால் அவ்வாறு வரும் தண்ணீர் இந்த தடுப்பணையில் தேங்கி நிற்கும். இதனால் இந்தப்பகுதியில் எப்போதுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும்.
தடுப்பணையை சுற்றி உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைவது கிடையாது. ஆனால் இப்போது தடுப்பணை நிரம்பி வழியும் இடமும், ஆறும் சமமாக இருக்கிறது. அந்த அளவுக்கு அணையை மண் மூடிவிட்டது. இதன் காரணமாக ஆற்றில் குறைவாக தண்ணீர் வந்தாலும், தண்ணீர் தடுப்பணையில் தேங்காமல், ஆற்றில் சென்றுவிடுகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குவிந்து இருந்த மண் அகற்றப்பட்டது. அதன் பின்னர் இதுவரை தடுப்பணை தூர்வாரப்படவில்லை.
தடுப்பணை ஒருமுறை நிறைந்து விட்டால், குறைந்தது 6 மாதங்களுக்கு தண்ணீர் போதுமானதாக இருந்தது. அதன் பின்னர் மீண்டும் மழை பெய்யும்போது தடுப்பணை நிரம்பிவிடும். இவ்வாறு எப்போதுமே தண்ணீர் நிறைந்து காணப்பட்ட சித்திரைசாவடி தடுப்பணை, தற்போது தண்ணீருக்கு பதிலாக மண் நிரம்பி இருப்பதை காணும்போது வேதனையாக இருக்கிறது. இதனால் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விட்டது.
எனவே தடுப்பணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துவிட்டோம். ஆனால் தடுப்பணையை தூர்வார இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீர்நிலைகளை தூர்வார அரசு உத்தரவிட்டபோதும், இந்த தடுப்பணையை யாரும் தூர்வாரவில்லை.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி பகுதிக்கு அடுத்தபடியாக தொண்டாமுத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் தான் விவசாயம் அதிகமாக நடந்து வருகிறது. தடுப்பணையை தூர்வார அதிகாரிகள் தவறினால், இந்தப்பகுதியில் விவசாயம் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, முதற்கட்டமாக இந்த தடுப்பணையை மூடி உள்ள மண்ணை அகற்றி தூர்வார வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.