தொலைதூர கருந்துளை கண்டுபிடிப்பு

இதுவரை அறிந்ததிலேயே வெகு தொலைவில் உள்ள, மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Update: 2017-12-23 09:15 GMT
பெருவெடிப்புக்கு 690 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பார்க்கும் இந்தக் கருந்துளை, 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

ஆனால் சூரியனின் எடையைவிட 800 மில்லியன் மடங்கு எடை கொண்ட இந்தக் கருந்துளை, பிரபஞ்சம் தோன்றியதற்குப் பிறகு இத்தகைய மிகப்பெரிய அளவை மிகக் குறைந்த நாட்களில் எட்டியுள்ளது வியப்பிற்குரியதாகும்.

‘நேச்சர்’ என்ற அறிவியல் இதழில் இது தொடர்பான கட்டுரை வெளியிட்டுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இக்கருந்துளை, ஒரு நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் இருந்துகொண்டு தன்னை நெருங்கும் பொருட்களை இழுத்துக்கொண்டிருக்கிறது. எனவே இது ‘குவாசர்’ என்று அழைக்கப்படுகிறது.

“குவாசர் மிகவும் பிரகாசமான, அதேநேரம் அதிக தொலைவில் உள்ள விண்பொருட்களில் ஒன்றாகும். இது, பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் புரிந்துகொள்ள மிகவும் முக்கியமான ஒன்று” என ஜெர்மனியில் உள்ள மாக்ஸ் பிளாங்க் விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பிராம் வெனிமன்ஸ் கூறுகிறார்.

இந்த குவாசர் மிகவும் சுவாரசியமான விஷயமாகக் கருதப்படுகிறது. காரணம், பிரபஞ்சம் அதன் தற்போதைய வயதில் 5 சதவீதமே இருந்த சமயத்தில் தொடங்கி இது வந்திருக்கிறது.

இந்த நேரத்தில்தான், முதல் நட்சத்திரம் தோன்றியதற்கு முன்பு, பிரபஞ்சம் இருண்ட காலத்திலிருந்து வெளிவரத் துவங்கியது.

குவாசரின் தொலைவு, ரெட்ஷிப்ட் என்னும் ஓர் அளவுகோல் மூலம் அளவிடப்படுகிறது. பேரண்டம் விரிவடைவதன் காரணமாக குவாசரின் ஒளியின் அலைநீளம் பூமியை அடைவதற்கு முன்பு எந்த அளவு இழுபட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட் ஷிப்ட் மதிப்பிடப்படுகிறது. புதிதாக கண்டுபிடித்த கருந்துளை 7.54 ரெட்ஷிப்ட் அளவைக் கொண்டுள்ளது.

எந்த அளவுக்கு ரெட்ஷிப்ட் அதிகமாக இருக் கிறதோ, அந்த அளவுக்கு அதன் தொலைவும் அதிகமாக இருக்கும்.

இந்த கண்டுபிடிப்புக்கு முன்பு, அதிக தொலைவுள்ள குவாசராக அறியப்பட்டது, பிரபஞ்சம் தோன்றி 800 மில்லியன் ஆண்டுகள் ஆனபோது தோன்றியதாகும்.

விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டபோதும் இவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு பொருளைக் காண்பதற்கு ஐந்தாண்டு காலம் ஆகியிருக்கிறது என்றும், இந்த பிரம்மாண்ட கருந்துளை உருவாவதற்கான செயல்முறை ஒன்று பேரண்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்திருக்கிறது என்றும் இணை ஆய்வாளரான எடுராடோ பனாதோஸ் கூறுகிறார்.

எதிர்பாராத இந்தக் கண்டுபிடிப்பு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆய்வுமையங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்கு, ஹவாயின் ஜெமினி வடக்கு தொலைநோக்கி மையமும், நாசாவின் வைட் பீல்டு அகச்சிவப்பு ஆய்வுத் தொலைநோக்கியும் அதிக உதவி செய்திருக்கின்றன.

மேலும் செய்திகள்