அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு நினைவூட்டும் ஆளில்லா விமானம்

ஜப்பானியர்கள் தமது வேலைகளில் மிகவும் ஆழ்ந்து ஈடுபடும் வழக்கம் உள்ளவர்கள். வேலையில் மூழ்கி, வீட்டைக்கூட மறந்துவிடுவது அவர்களில் பலரது இயல்பு.

Update: 2017-12-23 09:00 GMT
எனவே, வேலை நேரத்தையும் தாண்டி அதிக நேரம் பணிபுரியும் ஊழியர்களுக்கு நினைவூட்டி, அவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு ‘டுரோன்’ எனப்படும் ஆளில்லா சிறுவிமானத்தைப் பயன்படுத்த ஜப்பானிய நிறுவனம் ஒன்று திட்டமிட்டிருக்கிறது.

இந்த டுரோன்கள், கடைகள் மூடப்பட்டுவருகின்றன என்று அறிவிக்கப் பயன்படுத்தப்படும் பாடலான ‘ஆல்ட் லாங் சைனை’ இசைத்தபடி, அலுவலக நேரம் முடிந்தவுடன் அலுவலகத்துக்குள் சுற்றி வரும்.

ஊழியர்களின் அதிகமான பணி, அதனால் அவர்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்சினைகள் குறித்து ஜப்பான் நாடு கவலை கொண்டிருக்கிறது.

அந்தவகையில்தான், புதிய டுரோன் யோசனை முன்வைக்கப் படுகிறது. ஆனால், இது ஓர் அற்பமான யோசனை என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

அலுவலக பாதுகாப்பு மற்றும் துப்புரவு நிறுவனமான டாய்செய், புளூ இன்னோவேஷன் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான என்.டி.டி. ஈஸ்ட் ஆகியவை இணைந்து இந்த டுரோனை உருவாக்கவிருக்கின்றன.

காமிரா பொருத்தப்பட்ட இந்தச் சிறுவிமானம், பிரபல ஸ்காட்லாந்து இசையை இசைத்தபடி அலுவலகத்துக்குள் சுற்றி வரும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த டுரோன் சேவையை முதலில் தங்களது சொந்த நிறுவனத்திற்குள் சோதனை செய்யவும், பிறகு மற்றவர்களுக்கு இதை வழங்குவதற்கும் டாய்செய் திட்டமிட்டுள்ளது.

ஆனால், “இந்த முயற்சி பலன் தராது. அதிகப் பணி பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்கிறோம் என்ற பெயரில் நிறுவனங்கள் இதுபோன்ற அற்பமான விஷயங்களைச் செய்கின்றன” என்று ஷிஜியோகா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் தகவல் தொடர்பு பேராசிரியரான செய்ஜி டேக் ஷிட்டா கூறுகிறார்.

அதிகமான நேரம் பணிபுரியும் பிரச்சினை ஜப்பானிய அலுவலக கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதை அடிப்படையிலிருந்து தடுக்க வேண்டும் என்பது செய்ஜி டேக் ஷிட்டாவின் கருத்தாகும். இந்த விஷயத்தில் உரிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் ஸ்காட் நார்ட் இன்னொரு கோணத்தை முன்வைக்கிறார். அதாவது, தானியங்கிச் சாதனங்கள் ஏற்படுத்தும் தொல்லையால் ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினால், அவர்கள் தமது முடிக்கப் படாத பணிகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடும் என்பதுதான் அந்தக் கோணம்.

அதிக நேரம் பணிபுரிவதைக் குறைப்பதற்கு வேலைச்சுமையையும், நேரத்தை வீணடிக்கும் பணிகளையும் குறைக்க வேண்டும். ஜப்பானிய அலுவலகங்களில் பொதுவாகக் காணப்படும் போட்டி போட்டு பணிபுரியும் நிலையை ஒழிப்பது, அதிக ஊழியர்களைப் பணியமர்த்துவது போன்றவற்றின் மூலம் இந்த நிலையை மாற்ற முடியும் என்று பேராசிரியர் ஸ்காட் நார்ட் யோசனை கூறுகிறார்.

தீவிரமான வேலைக் கலாசாரத்தை வளர்த்தெடுத்த ஜப்பான், தற்போது அதை முறியடிக்கவே முயன்று வருகிறது. அதிக வேலையால் உயிரிழப்பது, அந்நாட்டில் தொடரும் நிகழ்வாகியுள்ளது.

எனவே இப்பிரச்சினையைக் குறிக்கும்விதமாக அங்கு ஒரு தனிச்சொல் உருவாகிவிட்டது. ‘கரோஷி’ என்பதுதான் அச்சொல். இந்த ஜப்பானியச் சொல்லுக்கு, ‘அதிக நேர வேலைப்பளுவால் உயிரிழப்பது’ என்று பொருள்.

இந்தப் பிரச்சினையால், பலரும் பக்கவாதம், இதயம் சார்ந்த நோய்கள், தற்கொலை போன்றவற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த இளம் பெண் ஊழியர், அதிக வேலை காரணமாக கடந்த அக்டோபரில் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து, தொழிலாளர் சட்டத்தை மீறியதற்காக குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தப் பெண் ஊழியர், தனது வேலை நேரத்தையும் தாண்டி 159 மணி நேரம் அதிகமாகப் பணிபுரிந்தது தெரியவந்தது.

இதுபோன்ற நிலையை மாற்ற முயலும் ஜப்பானிய அரசாங்கம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘சிறப்பு வெள்ளிக்கிழமை’ முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அது அதிகப் பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கடும் உழைப்பாலே புகழ்பெற்ற ஜப்பான், இன்று அதன் எதிர்மறை விளைவுகளை அனுபவித்து வருகிறது.

மேலும் செய்திகள்