சுயதொழில் தொடங்க இளைஞர்கள் முன்வர வேண்டும் அமைச்சர் ஷாஜகான் வேண்டுகோள்
பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி சுயதொழில் தொடங்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.
பாகூர்,
புதுச்சேரி கதர் கிராம தொழில் வாரியத்தின் மண்டல அலுவலகம் திறப்பு விழா மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம் காட்டுக்குப்பத்தில் நடந்தது. முகாமுக்கு பாப்ஸ்கோ சேர்மன் தனவேலு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கதர் வாரிய தலைமை செயல் அலுவலர் கணேசன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது:– பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டம் அனைவரையும் சென்றடையும் வகையில் மாநிலத்தில் 3 இடத்தில் மண்டல அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரை குறைந்த வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இதை முறையாக பயன்படுத்தி சுயதொழில் தொடங்கினால் மாநிலத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தற்போது குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு திட்டத்தை ஆர்வத்துடன் பயன்படுத்தினால் வரும் ஆண்டுகளில் கதர் வாரியம் மூலம் மத்திய அரசிடம் அதிக நிதி பெற முடியும்.
கதர் வாரியத்தின் மூலம் தொடங்கப்படும் தொழிலில் கிடைக்கும் உற்பத்திப் பொருட்கள் இந்த நிறுவனத்தின் மூலமே கொள்முதல் செய்யப்படும். இதனால் தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் மண்டல அலுவலகத்தை அணுகி ஆன்லைன் மூலம் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பார்கள். எனவே இந்த திட்டத்தினை வேலையில்லா இளைஞர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் பயன்படுத்தி சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.