லாரிகள் நேருக்குநேர் மோதல்; 2 டிரைவர்கள் பலி 10-ம் வகுப்பு மாணவன் காயம்

குடியாத்தம் அருகே சிலிகான் மணல் ஏற்றி வந்த லாரியும், மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 லாரிகளின் டிரைவர்களும் பலியானார்கள். இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மாணவன் காயம் அடைந்தான்.

Update: 2017-12-23 00:00 GMT
குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த ராமாலை ஊராட்சி காந்திகணவாய் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் கோபி (வயது 30) மணல் லாரி டிரைவர். இவர், நேற்று காலை மணல் எடுத்துக்கொண்டு குடியாத்தம்-சித்தூர் சாலையில் லாரியை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து கோவையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சிலிகான் மணல் ஏற்றிக்கொண்டு எதிரே ஒரு லாரி வந்தது. காலை 7 மணியளவில் பாக்கம் செல்வபெருமாள் நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் அருகே வந்தபோது சிலிகான் மணல் ஏற்றி வந்த லாரியும் எதிரே கோபி ஓட்டி வந்த மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

அதே நேரத்தில் பிச்சனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 15 வயது நிரம்பிய மாணவன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீதும் லாரி மோதியது. இதில் மணல் லாரி டிரைவர் கோபி மற்றும் சிலிகான் மணல் ஏற்றி வந்த லாரியின் டிரைவரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கடையாம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் குமாரும் (26) லாரிக்குள்ளேயே சிக்கி உயிருக்கு போராடினர்.

மோட்டார்சைக்கிளில் சென்ற மாணவனும் காயம் அடைந்தான். அந்த பகுதியில் இருந்தவர்கள் அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிதம்பரம் தலைமையில் வீரர்களும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், மகேந்திரன் தலைமையில் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்களால் விபத்தில் சிக்கிய 2 லாரிகளின் டிரைவர்களையும் உடனடியாக மீட்க முடியவில்லை.

இதனையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்கும் பணி நடந்தது. ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 2 டிரைவர்களும் மீட்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றொரு லாரி டிரைவரான குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது குமாரும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே விபத்து நடந்ததும் சிலிகான் மணல் லாரியிலிருந்து புகை வந்தது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து புகையை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தால் குடியாத்தம் - சித்தூர் சாலையில் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் நின்றன. சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து தொடர்பாக கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா, பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மேகநாதன், ராமமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த மணல் லாரி டிரைவர் கோபிக்கு வரலட்சுமி என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

காலையில் அதிக அளவில் பனிமூட்டம் இருந்ததாலும், சிலிகான் மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர் கண் அயர்ந்ததாலும்தான் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்து விபத்தில் சிக்கிய 15 வயது மாணவனின் தந்தை பால் வியாபாரியாவார். மோட்டார்சைக்கிளில் மாணவனை பால் எடுப்பதற்காக அனுப்பி வைத்தபோது இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளான். அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்