கொடுங்கையூரில் அக்காள் கணவரை குத்திக்கொலை செய்த வாலிபர் கைது
கொடுங்கையூரில், அக்காள் கணவரை குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 38). பெயிண்டரான இவர், எருக்கஞ்சேரி நேரு நகரைச் சேர்ந்த வசந்தி (30) என்ற பெண்ணை 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார்.
வசந்திக்கு செங்குன்றத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் உதயகுமாரை விட்டுப்பிரிந்து, கள்ளக்காதலன் ரமேசுடன் செங்குன்றத்தில் வசித்து வருகிறார். மகளை தன்னுடன் வளர்த்து வருகிறார்.
வாக்குவாதம்
மகளை தன்னுடன் அனுப்பிவைக்கும்படி வசந்தியிடம் உதயகுமார் கேட்டு வந்தார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் செங்குன்றத்தில் வசித்துவரும் வசந்தியின் தம்பி கார்த்திக்கிடம் (30), தனது மகளை தன்னுடன் அனுப்பிவைக்க உதவி செய்யுமாறு உதயகுமார் கேட்டார்.
இதுதொடர்பாக பேசுவதற்காக கார்த்திக், உதயகுமார் இருவரும் நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூரில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தினர். அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
குத்திக்கொலை
பின்னர் கார்த்திக், நேரு நகரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டுக்கு உதயகுமாரை அழைத்துச்சென்றார். அங்கு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதயகுமாரை சரமாரியாக குத்திக்கொலை செய்தார்.
நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ரத்தக்கறையுடன் அங்கு சுற்றித்திரிந்த கார்த்திக்கை கொடுங்கையூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர், குடிபோதையில் கீழே விழுந்ததில் ரத்தக்காயம் ஏற்பட்டதாக கூறினார். ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று நேற்று போதை தெளிந்ததும் தீவிர விசாரணை நடத்தினர்.
கைது
அப்போது கார்த்திக், தனது அக்காள் கணவர் உதயகுமாரை குத்திக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் கார்த்திக்கை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த உதயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.